2025 ஆம் ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. மகாலட்சுமி அருளை பெறுவதற்கான வழிபாட்டு நேரங்கள் மற்றும் பூஜை செய்யும் முறை ஆகியவற்றை இந்த பதிவில் பார்க்கலாம். 

வரலெட்சுமி பூஜை 2025

ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விரத தினங்களில் வரலட்சுமி விரதமும் ஒன்று. இந்த தினத்தில் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. திருமணமான பெண்கள் தங்கள் கணவரும், குடும்பத்தினரும் நலமுடன் இருக்க இந்த பூஜையை மேற்கொள்கின்றனர். திருமணமாகாத பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டும் என்பதற்காக இந்த நோன்பு இருந்து வழிபடுகின்றனர். அந்த வகையில் இந்த வருடம் வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வருகிறது. மேலும் அந்த தினம் பௌர்ணமி என்பதால் இது மிகச் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த தினத்தில் வழிபடுபவர்கள் வீட்டில் செல்வம், மகிழ்ச்சி அளவில்லாமல் பெருகும் என்பது நம்பிக்கை.

3 முறைகளில் வரலட்சுமி விரதம் இருக்கலாம்

வரலட்சுமி விரதம் என்பது மூன்று நாட்கள் வழிபட வேண்டிய ஒரு விரதமாகும். மூன்று வகைகளில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். மகாலட்சுமியின் படம் மட்டும் வைத்து வழிபடுவது ஒரு முறையாகும். இரண்டாவது முறையில் மகாலட்சுமியின் படத்தை ஒரு மணப்பலகையில் எழுந்தருள செய்தும், கலசம் வைத்தும் வழிபடலாம். இந்த முறையில் வியாழக்கிழமை மாலை அம்பிகையை வீட்டிற்கு அழைத்து வெள்ளிக்கிழமை பூஜை செய்து சனிக்கிழமை வழிபாட்டினை நிறைவு செய்ய வேண்டும். மூன்றாவது முறையில் வெள்ளிக்கிழமை மட்டும் அம்பிகையை அழைத்து ஒரு நாளிலேயே பூஜையை நிறைவு செய்வதாகும். ஆனால் இரண்டாவது முறை தான் பொதுவாக அனைவராலும் பின்பற்றப்படும் முறையாகும். வியாழக்கிழமை மாலையில் அம்பிகையை அழைத்து, கலசத்தில் எழுந்தருள செய்து, வெள்ளிக்கிழமை பூஜை செய்து, சனிக்கிழமை பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

வரலட்சுமி விரதம் நேரம்

ஆகஸ்ட் 7 ஆம் தேதி அம்பிகையை அழைப்பதற்கான நேரம் மாலை 6:00 மணி முதல் 7:20 வரை. காலையிலேயே அழைக்க விரும்புபவர்கள் 10:35 மணி முதல் 12:00 மணி வரை அழைக்கலாம். ஆகஸ்ட் 8 ஆம் தேதி அம்பிகையை அழைக்க விரும்புபவர்கள் காலை 6:00 மணி முதல் 7:45 மணி வரை அழைக்கலாம். பூஜை செய்வதற்கான நேரம் ஆகஸ்ட் 8ஆம் தேதி சிம்ம லக்னத்தில் காலை 6:29 முதல் 8:45 வரையும், விருச்சிக லட்சணத்தில் பூஜை செய்ய வேண்டியவர்கள் மதியம் 1:22 முதல் 3:41 வரையும், கும்ப லக்னத்தில் பூஜை செய்பவர்கள் மாலை 7:27 முதல் 8:54 வரையும், விருசப லக்ன பூஜை செய்ய விரும்புபவர்கள் இரவு 11:59 முதல் ஆகஸ்ட் 9 அதிகாலை 1:50 வரையும் செய்யலாம்.

முதல் நாளே அம்பிகையை அழைக்க வேண்டும்

விரதத்திற்கு முதல் நாள் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அன்று வீடு பூஜை செய்யும் இடங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்து கலசம் வைப்பதற்கான மேடையை அலங்கரிக்க வேண்டும். கலசத்தில் புனித நீர் நிரப்பி அதில் நாணயங்கள், எலுமிச்சை, மஞ்சள், வெற்றிலை, பாக்கு போன்ற மங்கலப் பொருட்களை போட்டு மாவிலைக் கொண்டு மூடி அதன் மீது தேங்காய் வைக்கவும். நீருக்கு பதிலாக பச்சரிசியும் நிரப்பிக் கொள்ளலாம் பின்னர் மகாலட்சுமியின் முகம் இருந்தால் அதை வீட்டு வாசலில் ஒரு மணப்பலகையில் வைத்து தீப ஆராதனை காட்டி அம்பிகையை வீட்டிற்குள் அழைத்து வர வேண்டும். அம்மா மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் எழுந்தருளி அருள் புரிவாய் என்று மனதார கூறிக்கொண்டு இந்த பூஜையை செய்ய வேண்டும். அம்பிகையின் முகம் இல்லாதவர்கள் புகைப்படம் இருந்தால் அதையும் இதே முறையில் செய்ய வேண்டும். இது அம்பிகையை வீட்டிற்குள் அழைத்து வரும் முறையாகும். மறுநாள் காலை மேற் குறிப்பிடப்பட்டுள்ள பூஜை நேரத்தில் பூஜையை தொடங்க வேண்டும்.

கலசம் செய்வது எப்படி?

கலசம் தயாரிப்பதற்கு செம்பு அல்லது பித்தளை பாத்திரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். கலசத்தில் தண்ணீர் திறப்பு வழிபடுபவர்கள் கலசத்தின் உள்ளே எலுமிச்சை பழம், மஞ்சள் தூள், ஏலக்காய், திரவிய பொடி, நாணயங்கள் சேர்க்கலாம். பின்னர் ஒரு மணப்பலகையில் கோலமிட்டு அதன் மீது வாழை இலை பரப்பி அதில் பச்சரிசி அல்லது நெல் பரப்ப வேண்டும். அதன் மேல் கலசத்தை வைக்க வேண்டும். கலசத்திற்குள் அரிசி போடுபவர்களாக இருந்தால் முக்கால் பாகம் பச்சரிசி சேர்த்து 11 நாணயங்கள், ஜாதிக்காய், எலுமிச்சம்பழம், விரலி மஞ்சள், மாசிக்காய், ஏலக்காய், காதோலை கருகமணி ஆகியவற்றை சேர்க்க வேண்டும். அதன்மேல் மாவிலை வைத்து மஞ்சள் தடவி தேங்காய் வைத்துக் கொள்ளலாம். அம்பாளின் முகம் இருப்பவர்கள் அதையும் வைத்து அலங்கரிக்கலாம். அம்பாளுக்கு புது புடவை, ஜாக்கெட் துணி வாங்கி அதையும் சுற்றி அலங்காரம் செய்ய வேண்டும்.

வரலெட்சுமி விரத பூஜை முறைகள்

அம்மன் படம் அல்லது கலசத்திற்கு மாலைகள், பூக்கள், சந்தனம், குங்குமம் வைத்து நோன்பு சரடு, மஞ்சள் கயிறு ஆகியவற்றை சாற்ற வேண்டும். பூஜை தொடங்குவதற்கு முன்னர் விநாயகரை வழிபட்டு கலசத்திற்கு பூஜை செய்ய வேண்டும். அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம் ஆகியவற்றை படித்து குங்குமம் அல்லது பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். மஞ்சள் கயிறில் ஒன்பது முடிச்சுகள் போட்டு அம்மன் காலடியில் வைத்து பூஜை செய்து அதை பெண்கள் தங்கள் கழுத்தில் கட்டிக் கொள்ளலாம். திருமணமாகாதவர்களின் பெயர்களை எழுதி அம்பிகையின் காலடியில் வைத்து பூஜை செய்து வழிபடலாம். அம்பிகைக்கு பிடித்த சர்க்கரைப் பொங்கல், பாயாசம், கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றை நெய்வேத்யமாக படைக்கலாம். இந்த உணவுகளை ஒன்பது என்கிற எண்ணிக்கையில் படைப்பது சிறப்பு.

பூஜையை நிறைவு செய்யும் முறைகள்

பூஜைக்கு வந்திருக்கும் சுமங்கலி பெண்களுக்கு தேங்காய், மஞ்சள், குங்குமம் ஆகிய மங்கலப் பொருட்களை கொடுக்க வேண்டும். முடிந்தவர்கள் அன்னதானமும் கொடுக்கலாம். ஒரு நாள் மட்டும் பூஜை செய்பவர்கள் வெள்ளிக்கிழமை அன்றே இரவு ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்துவிடலாம். மறுநாள் நிறைவு செய்பவர்கள் கலசத்தை சிறிது அசைத்து பின்னர் தீப துபாரதனை காட்டி விரதத்தை நிறைவு செய்யலாம். கலசத்தில் இடப்பட்டிருந்த அரிசியை சமைத்து வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடலாம். கலசத்தில் நீர் நிரப்பி வழிபட்டவர்கள் அதை வீடு முழுவதும் தெளித்து மீதி தண்ணீரை கால் படாத இடத்தில் கொட்டி விடலாம். அம்மனுக்கு நெய்வேத்தியம் செய்த பொருட்களை மற்றவர்களுக்கும் கொடுத்து தானும் சாப்பிடலாம். இந்த முறையில் வரலட்சுமி பூஜையை செய்து அம்மனின் அருளை பரிபூரணமாக பெறுங்கள்.