Asianet News TamilAsianet News Tamil

திருப்பதியில் பக்தர்கள் தங்கும் விடுதி வாடகை உயர்வு: பாஜக கண்டனம்

திருப்பதியில் ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் விடுதி வாடகையை தேவஸ்தான நிர்வாகம் பன்மடங்கு உயர்த்தியுள்ளது.

Tirumala Tirupati Devasthanam increases room rentals in Tirumala
Author
First Published Jan 9, 2023, 10:54 AM IST

உலகப் பிரசித்த பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் லட்சக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கிறார்கள். வருகை தரும் பக்தர்கள் தங்குவதற்காக 7 ஆயிரம் அறைகள் கொண்டு தங்கும் விடுதியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்திவருகிறது.

இந்தத் தங்கும் விடுதியில் அறைகளின் வாடகையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் உயர்த்தி உள்ளது. கௌஸ்தபம், நந்தகம், பாஞ்சஜன்யம், வகுளமாதா போன்ற அறைகளில் தங்குவதற்கான வாடகைக் கட்டணம் விலை ரூ.500 - ரூ.600 ஆக இருந்தது. இப்போது இந்தக் கட்டணம் ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

நாராயணகிரி விடுதியில் சாதாரண அறையில் தங்குவதற்கான வாடகை ரூ.150 இல் இருந்து ரூ.700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நாராயணகிரி விடுதி எண் 4 இல் இருக்கும் அறைகளுக்கான வாடகை ரூ.750 இல் இருந்து ரூ.1,700 ஆக அதிகரித்துவிட்டது.

சிறப்பு அறையின் வாடகை ரூ.750 இல் இருந்து ரூ.2,200 ஆக உயர்ந்துள்ளது. சிறப்பு வீடுகளின் வாடகை ரூ.750 இல் இருந்து 2,800 ஆகக் கூடிவிட்டது.

ரூ.50 வாடகைக்கு விடப்படும் எஸ்.எம்.சி, எஸ்.என்.சி, ஏ.எஸ்சி, எஸ்.வி.சி விடுதிகள், ரூ.100 வாடகை பெறப்படும்  ராம்பக் கீச்சா, வராக சுவாமி, எஸ்என்ஜிஎச், எச்விடி, சிஏடிசி, டிபிசி, சப்தகிரி வீடுகள் ஆகியவற்றின் வாடகையும் உயர்ந்திருப்பதாகத் தெரிகிறது.

இதனிடையே, தேவஸ்தான நிர்வாகம் பக்தர்கள் தங்கும் விடுதி வாடகையை பலமடங்கு அதிகப்படுத்தியது குறித்து பாஜக கண்டனம் தெரிவித்திருக்கிறது.

ஏற்கெனவே திருப்பதி - திருமலை இடையே இயக்கப்படும் பேருந்துக் கட்டணம், லட்டு, வடை பிரசாதம் ஆகியவற்றின் விலையும் உயர்த்தப்பட்டன. அண்மையில் அலிபிரி வாகன சோதனைச் சாவடியில் வாகன கட்டணமும் உயர்த்தப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios