Asianet News TamilAsianet News Tamil

திதி தீர்த்தங்கள் என்றால் என்ன.. எவையெல்லாம் சிறப்பானவை!

ஜோதிடத்தில் ஒவ்வொரு நாளும் கூறப்படுகின்ற திதிகள் குறித்தும், அந்த திதி தினத்தில் என்ன செய்தால் எப்படிப்பட்ட பலன்கள் உண்டாகும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

Things you don't know about Didi Theerthas..
Author
First Published Oct 31, 2022, 5:31 PM IST

திதி 

சந்திரனுக்குரிய தினத்தை தான் திதி என்கிறோம். ஒரு மாதத்தில் 30 திதிகள் என்றும், இதில் அமாவாசை தொடங்கி வருகின்ற 15 திதிகள் வளர்பிறை திதிகள் என்றும், பௌர்ணமி தொடங்கி வருகின்ற 15 திதிகள் தேய்பிறை திதிகள் என்றும் அழைக்கப்படுகிறது. அதேபோன்று ஒவ்வொரு திதிகளுக்கும், ஒரு அதிதேவதை உள்ளது. அந்த திதி தினங்களில், அந்த திதிகளுக்குரிய தேவதைகளை வணங்கி, அதில் குறிப்பிட்டுள்ள காரியங்களில் ஈடுபட்டால் நன்மையான பலன்களை பெற முடியும் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் அறிவுரை. அந்த வகையில் ஜோதிடத்தில் ஒவ்வொரு நாளும் கூறப்படுகின்ற திதிகள் குறித்தும், அந்த திதி தினத்தில் என்ன செய்தால் எப்படிப்பட்ட பலன்கள் உண்டாகும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

தீர்த்தங்கள்

மொத்தம் 64 தீர்த்தக் கட்டங்கள் ராமேஸ்வரத்தில் உள்ளன. சகல பாவங்களும் நீங்க 64 தீர்த்தக் கட்டங்களில் அக்னி தீர்த்தம் எனப்படும் கடலில், மகாளய அமாவாசை அன்று நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.

*கங்கை நதி ஓடிடும் காசியில், தர்ப்பணாதி பூஜைகள் செய்வது நல்லது. அதேபோன்று தான் விஷ்ணு பாதம் காசியின் அருகே உள்ள விஷ்ணுகயாவில் உள்ள ஆலமரத்தடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதில் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் மகத்தான புண்ணியங்கள் வரும். மேலும் இந்த தினத்தன்று வாஞ்சியம் தலத்தில் உள்ள குப்த கங்கையில் புனித நீராடி நீத்தார் கடனை நிறைவேற்றினால் மகத்தான புண்ணியம் கிட்டும்.

*கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் நீராடி, முன்னோர்களை நினைத்து படித்துறையில் தர்ப்பணம் செய்து அதன் கரையில் உள்ள ஆலமரத்தடியில் தான தர்மங்கள் செய்தால் நினைத்தது நிறைவேறும். அடுத்து, நன்னிலம், பூந்தோட்டத்திற்கு அருகே இருக்கும் திலதைப்பதி என்ற திலதர்ப்பணபுரியில்  தர்ப்பணம் செய்து வழிபட முன்னோர்கள் ஆசி கிடைக்கும். ராமபிரான் தன் தந்தைக்கு தர்ப்பணம் செய்த தலமும் இது தான்.

*ஒவ்வொரு அமாவாசை அன்றுமே சென்னையை அடுத்த திருவள்ளூர் வைத்திய வீரராகவர் ஆலய திருக்குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணாதி காரியங்கள் விசேஷமாக நடைபெறும். அதிலும் மகாளய அமாவாசை தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதுபோன்று நேர்த்திக் கடன் நிறைவேற்றுவதைக் காண முடியும். மேலும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய திருக்குளக்கரையில் இந்த தினத்தன்று முன்னோர்களை வழிபட, அவர்கள் ஆசியால் வம்சம் தழைத்திருக்கும்.

திதி பார்ப்பது நல்லதா, கெட்டதா?

*சேலத்தில் உள்ள சுகவனேஸ்வரர் ஆலய நந்தவனத்தின் பின், இந்த தினத்தன்று ஏராளமான பக்தர்கள் தம் முன்னோர் கடன்களை செய்து புண்ணியம் பெறுகின்றனர்.

* ஸ்ரீரங்கத்தில் காவிரி நதிக்கரையில் சாஸ்திர விதிப்படி இந்த தினத்தன்று தர்ப்பணம் செய்தால் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.

*பவானி சங்கமேஸ்வரர் கோவிலின் அருகே கூடுதுறையில், இந்த தினத்தன்று ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு சிராத்தம் கொடுத்து மங்கலங்கள் பெறுகின்றனர்.

* இந்த தினத்தன்று திருவையாற்றுப் படித்துறையில் முன்னோர்களுக்கு பூஜைகள் செய்து தர்ப்பணம் செய்தால் தீவினைகள் அகன்று நன்மைகள் கிடைக்கும்.

*இந்த தினத்தன்று கடலூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து பின், அத்தல குளக்கரையில் முன்னோர் கடன் தீர்த்து அருள் பெறலாம்.

*இந்த தினத்தன்று வேதாரண்யத்தில் ஆதிசேது எனும் கோடியக்கரை தீர்த்தக்கரையில் மூழ்கி திதி கொடுத்து பக்தர்கள் வாழ்வில் வளம் பெறுகிறார்கள்.

முன்னோர்கள் சொல்லும் சாங்கியமும் சம்பிரதாயமும்..

*ராமபிரான், ஜடாயுவிற்கு காஞ்சிபுரம் அருகே உள்ள திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோவிலில், நீத்தார் கடன் நிறைவேற்றினார். அந்தத் தலத்தில் மஹாளயபட்ச தினத்தன்று நீத்தார் கடனை நிறைவேற்றினால் முன்னோர்களின் ஆசியுடன், திருமாலின் திருவருளும் கிடைக்கும்.

*அளகாபுத்தூர் படிக்காசுநாதர் கோயிலில் நவகிரகங்க சந்நதியில் சூரியனும் சந்திரனும் எதிரெதிரே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு நீத்தார் கடனை நிறைவேற்றும் பக்தர்கள் அனேகம்.

*திருச்சிக்கு அருகே உள்ள பூவாளூர் திருமூலநாதர் கோவிலுக்கு அருகே ஓடும் பங்குனி ஆற்றின் கரையில் மஹாளயபட்ச தர்ப்பணம் செய்தால் திதி கொடுக்கத் தவறிய தோஷங்கள் நீங்கி, முன்னோர்கள் ஆசி கிடைக்கும்.

*திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சந்திர தீர்த்தம் அருகேயுள்ள ஆலமரத்தடியில் ருத்ரபாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அங்கு  முன்னோர்கள் அருள் பெற மஹாளயபட்ச தர்ப்பணம் செய்வார்கள்.

*திருப்பூவனம் பூவனநாதர் கோவிலில் சூரியனால் உண்டாக்கப்பட்ட மணிகன்னிகை தீர்த்தக் கரையில்  தர்ப்பணாதி காரியங்களை புரிபவர்கள் முன்னோர்களின் பரிபூரண அருளைப் பெறுகிறார்கள்.

*விருத்தாசலத்திலுள்ள விருத்தகிரீஸ்வரர் கோயிலிற்கு அருகே ஓடும் மணிமுத்தாறு நதி தீரத்திலும் நீத்தார் கடனை மக்கள் நிறைவேற்றுகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios