ரம்ஜான்: இஸ்லாமிய பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஷெரி கான்கள்..!
ரம்ஜான் நோன்பு காலத்தில் அதிகாலை ஸஹர் என்ற நோன்பு வைப்பதற்கு இஸ்லாமியர்களை ஷெரி கான்கள் டிரம்ஸ் இசைத்து எழுப்பும் பாரம்பரியம் நவீன காலத்திலும் தொடர்ந்துவருகிறது. இன்றளவும் இதை தொடர்வதன் மூலம் இஸ்லாமிய பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள் ஷெரி கான்கள்.
இஸ்லாமியர்களின் மிகப்பெரிய பண்டிகை ரம்ஜான். ரம்ஜான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையை உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் மிகப்பிரசித்தியாக கொண்டாடிவருகிறார்கள்.
தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட இந்த நவீன காலத்தில் பாரம்பரியமாக பின்பற்றுப்பட்டுவந்த பல விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவருகிறது. பொதுவாக அனைத்து மதங்களிலுமே பண்டிகைகள், விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்தாலும், பண்டிகைகள் கொண்டாட்டத்தின் நோக்கமறிந்து, காரணங்களை தெரிந்துகொண்டு முறையாக பின்பற்றப்படுவதில்லை.
ஆனால் என்னதான் தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டாலும், சில விஷயங்கள் தொடர்ச்சியாக பின்பற்றப்படும். அப்படியான ஒரு பாரம்பரிய நடவடிக்கை தான், இஸ்லாம் நாடுகளில் இன்றளவும் பின்பற்றப்பட்டுவருகிறது.
நோன்பு இருக்கும் காலத்தில் பின்னிரவு(அதிகாலை) 3.45 மணிக்கு இஸ்லாமியர்கள் நோன்பு வைப்பார்கள். அதற்கு பெயர் ஸஹர். அதேபோல மாலை நோன்பு திறப்பதற்கு இஃப்தார் என்று பெயர். அதிகாலையில் இஸ்லாமியர்கள் அனைவரும் எழுந்து தொழுதுவிட்டு அனைவரும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக நோன்பு வைப்பார்கள்.
இந்த ஸஹர் நோன்பு வைப்பதற்காக இஸ்லாமியர்களை அதிகாலையில் டிரம்ஸ் இசைத்து, மின்னொளிகள் ஒளித்து எழுப்புவது இஸ்லாமிய நாடுகளின் பாரம்பரியம். இந்தியாவில் இது வழக்கத்தில் இல்லை. மத்திய கிழக்கு நாடுகள், துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளில் இன்றளவும் இந்த முறை வழக்கத்தில் உள்ளது. அப்படி எழுப்புபவர்களுக்கு பெயர் ஷெரி கான்.
விலங்குகளின் தோல்களை கொண்டு உருவாக்கப்பட்ட இசைக்கருவிகளில் இசையமைத்து ஸஹர் நோன்பு வைப்பதற்கு இஸ்லாமியர்கள் எழுப்பப்படுவார்கள். மெக்கா, மதீனா ஆகிய இஸ்லாமியர்களின் புண்ணிய பூமிகளிலிருந்து உருவான வழக்கம் இது. தற்போதைய நவீன காலத்தில் செல்ஃபோனில் அலாரம் வைத்து அவரவர் எழுந்துவிடலாம். ஆனால் அப்படியான வசதி இருக்கும் இந்த காலத்திலும் ஷெரி கான்கள் அதிகாலையில் மின்னொளிகளுடன் டிரம்ஸ் இசைத்து எழுப்புகின்றனர். டிரம்ஸ் இசைக்கு எழாதவர்கள், வெளிச்சத்திற்கு எழுவார்கள்.
நோன்பு முடிந்து ரம்ஜான் பண்டிகை தினத்தன்று, ஷெரி கான்களுக்கு மக்கள் பரிசுகளை வழங்கி மகிழ்வித்து மகிழ்வார்கள்.