Sabarimala: வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட சபரிமலை ஐயப்பனின் வருவாய்!
சபரிமலை ஐயப்பன் கோயிலின் வருவாய் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து 300 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.
கேரளாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி மண்டல, மகரவிளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கொரோனா கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாமல் நடை திறக்கப்படுவதால் பக்தர்கள் வருகை அலைமோதியது. தினமும் 90 ஆயிரம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் பெறப்பட்ட காணிக்கையும் அதிகமாக உள்ளது. மண்டல பூஜை, மகர பூஜைகளுக்காக கோயில் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து ஜனவரி 12ஆம் தேதி வரை கிடைத்த காணிக்கை ரூ.310.40 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
சிவனுக்கு நண்டுகளை காணிக்கையாகச் செலுத்தவது ஏன்?
தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் கூடிக்கொண்டே வருகிறது. இப்போது தினமும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வருகிறார்கள் என்றும் புதன்கிழமை வரையான கோயில் வருவாய் ரூ.315.46 கோடியாக உள்ளது என்றும் தேசவம் போர்டு கூறியுள்ளது.
2018ஆம் ஆண்டு மண்டல, மகர பூஜைகளின்போது ரூ.260 கோடி வசூல் செய்யப்பட்டதே அதிகபட்ச வருவாயாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அதைவிட பல கோடி ரூபாய் கூடுதலாக காணிக்கைகள் குவிந்து வருகின்றன.
காணிக்கையை எண்ணுவதற்கு 6 சிறிய இயந்திரங்களும் ஒரு பெரிய இயந்திரமும் உள்ளன. இந்த ஆண்டுக்கான சீசன் நாளையுடன் முடிவதால் காணிக்கை வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.