அனுமன் பிறந்த இடமான அஞ்சனேரி மலை உச்சிக்கு செல்ல விரைவில் 'ரோப்வே' அமைக்கத் திட்டம்!!
அனுமன் அவதரித்த இடமாக சொல்லப்படும் அஞ்சனேரி மலை உச்சிக்கு சில நிமிடங்களில் செல்லும் வகையில் அடுத்த 2 ஆண்டுகளில் ரோப்வே அமைக்கப்படவுள்ளது. இந்த மலை உச்சிக்கு நடந்து சென்றால் 2 முதல் 3 மணி நேரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து சமயத்தில் பலருக்கும் விருப்ப தெய்வமான அனுமனின் பிறப்பிடமாக நாசிக்கில் உள்ள அஞ்சனேரி மலைகள் நம்பப்படுகிறது. இங்கு ரூ.377 கோடி மதிப்பில் 6 கி.மீக்கு ரோப்வே திட்டத்தை அமைக்கும் பணியினை மத்திய அரசு தற்போது தொடங்கியுள்ளது. இந்த ரோப்வே பிரம்மகிரி மலையேற்றப் பகுதி முதல் அஞ்சனேரி மலைகள் வரை அடுத்த 2 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்படும். தற்போது இந்த மலைப்பாதை செங்குத்தான சாலையாக இருப்பதால் நடந்து மலையுச்சியை அடைய 2 முதல் 3 மணி நேரம் வரை ஆகிறது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), மத்திய அரசின் முக்கிய ‘பர்வரத்மாலா’ என்ற திட்டத்தின்படி, அஞ்சனேரி ரோப்வே திட்டத்திற்கான ஏலங்களை நேற்று (ஜூன்17) நடத்தியது.
"அஞ்சநேரி மலைகள் அனுமனின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இங்கு ஒரு குகையும் அஞ்சனி மாதா கோயிலும் இருக்கிறது. இதனை யாத்ரீகர்களும், பக்தர்களும் சென்று வழிபடுகின்றனர். கிட்டத்தட்ட 4,200 அடிக்கு மேல் உயரத்தில் இருக்கும் இந்த கோயிலுக்குச் செல்ல நாம் 3 மலைகள் ஏறிச் செல்ல வேண்டும்.
இந்த கடினமான பயணத்தை எளிமையாக்கும் நோக்கில் அரசு ரோப்வே திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் படி, 5.7 கிமீ நீளமுள்ள ரோப்வே, மூன்று மலைகளின் குறுக்கே அமைக்கப்படும். இதன் மூலம் மலை உச்சிக்குச் செல்லும் பயணம் சில நிமிடங்களாகக் குறைக்கப்படும்.
வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் மொத்தமாக 90 கி.மீ.க்கு 18 ரோப்வே திட்டங்களை மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ஏற்கனவே கூறியது. இதில் ஸ்ரீநகரின் சங்கராச்சாரியார் கோயிலுக்கு 1 கி.மீ ரோப்வே, கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கர்னூலில் உள்ள ஸ்ரீசைலம் ஜோதிர்லிங்க கோயிலுக்கு, மற்றொன்று லே அரண்மனைக்கும் குவாலியர் கோட்டைக்கும் அமைக்கப்படுகிறது. \
உஜ்ஜயினி மகாகாலேஷ்வர் கோயிலுக்கு 2 கிமீ ரோப்வே அமைக்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு, வாரணாசியில் ரோப்வே போடவும், கேதார்நாத் கோயிலுக்கும், உத்தரகாண்டில் உள்ள ஹேம்குண்ட் சாஹிப்புக்கும் மற்றொரு ரோப்வே பாதையை உருவாக்கவும் மத்திய அரசு டெண்டர் விட்டது.
இதையும் படிங்க: வீட்டில் எத்தனை வாசல்கள் இருந்தால் செல்வம் பெருகும்!! உங்க வீட்டு வாசல் இப்படி இருந்தா அமோகமா வாழலாம்!!
பழனியில் இருந்து கொடைக்கானல் வரை 12 கிமீ ரோப்வே திட்டம் தமிழ்நாட்டில் திட்டமிடப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொடசாத்ரி மலைகளுக்கு மற்றொரு 7-கிமீ ரோப்வே, இமாச்சலப் பிரதேசத்தின் குலுவில் உள்ள பிஜிலி மகாதேவ் கோயிலுக்கு 3-கிமீ உள்ளிட்ட மற்ற சில மாநிலங்களிலும் ரோப்வே அமைக்க திட்டமிடப்பட்டுவருகிறது.