நவராத்திரி ஸ்பெஷல் - அம்பிகை விரும்பும் தாம்பூல உபசாரம்!
தாம்பூலத்திற்கு எல்லா தெய்வ பூஜைகளிலும் ஒரு முக்கியத்துவம் உள்ளது. பொதுவாக நமது வீடுகளுக்கு சுமங்கலிப் பெண்கள் வந்தால், கட்டாயம் தாம்பூலம் தருவது அவசியம். தாம்பூலம் என்பதே வெற்றிலை பாக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இவை இரண்டும் இணைந்த பொதுப்பெயராகவும் இதை சொல்லலாம். இதனுடன் பழங்கள், ரவிக்கை துண்டுகள் , மஞ்சள் குங்குமம், பூக்கள் சேர்த்து கொடுக்கும் போது அவை மேலும் சக்தி பெறுகுகிறது. தாம்பூலத்தில் அதாவது வெற்றிலையில் முப்பெருந்தேவி வாசம் செய்கின்றனர்.
ஜீவராசிகள் இடையில், தயை, ஈகை போன்ற குணங்களை விருத்தி செய்யும் முகமாக, மனிதர்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் கடமைகளுள் ஒன்ராக இருப்பது அதிதி போஜனம்.’ இதில் 'அதிதி’ என்பவர், உறவினர்களோ அல்லது அறிவித்துவிட்டு வரும் விருந்தினரோ இல்லை. முன்பின் தெரியாத நபர், ‘பசி ‘ என்று வந்தால், அவருக்கு உணவிடுதலே, அதிதி போஜனம். அவர் உணவு எடுத்துக் கொண்ட பின் தாம்பூலம் கொடுத்தல் வேண்டும்.
அதேபோன்று வீடுகளுக்கு சுமங்கலிப் பெண்கள் வந்தால், அவர்களுக்கு தாம்பூலம் தரவேண்டும். இல்லையென்றால் குறைந்தபட்சம் குங்குமம் மட்டுமாவது தர வேண்டும். குறிப்பாக அம்பாளை மகிழ்விக்கும் செயல்களில் ஒன்றாக தாம்பூலம் தருதல் இருக்கிறது. லலிதா சஹஸ்ரநாமம் தேவியை தாம்பூல பூரித முகீ என புகழ்கிறது. அதாவது ‘தாம்பூலம் தரித்ததால், பூரிப்படைந்த முகத்தினை உடையவள் ‘ என்பது தான் இதன் பொருள்.
அதேபோன்று பெண்கள் ஒருவருக்கொருவர் விழாக் காலங்களிலும், பண்டிகை நாட்களிலும் தாம்பூலம் வழங்கிக் கொள்வதன் மூலமாக, ‘நாம் இருவரும் தோழிகள், நாம் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும் ‘, என மறைமுகமாக ஒப்புக் கொள்கின்றனர். இந்த தாம்பூலமானது வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், சீப்பு, முகம் பார்க்கும் கண்ணாடி, வளையல், மஞ்சள் கயிறு, தேங்காய், பழம், பூ, மருதாணி, கண்மை, தட்சணை, ஸ்லோக புஸ்தகம், ரவிக்கைத்துணி அல்லது புடவை ஆகிய பொருட்களை உள்ளடக்கியது.
இந்த அனைத்து பொருளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. வெற்றிலை, பாக்கு, கொடுப்பதன் காரணத்தை முன்பே பார்த்தோம். அதேபோன்று தான் மஞ்சள், குங்குமம் ஆகியவை மஞ்சள் கயிறு சுமங்கலித் தன்மையை வழங்குகிறது. கணவனின் ஆயுளை விருத்தி செய்வதற்காக சீப்பும், கணவனின் ஆரோக்கியம் காத்திட கண்ணாடியும், மன அமைதி பெற வளையலும், பாவம் நீங்க தேங்காயும், அன்னதானப் பலன் கிடைக்க பழமும், மகிழ்ச்சி பெருக பூவும், நோய் வராதிருக்க மருதாணியும், திருஷ்டி தோஷங்கள் அண்டாதிருக்க கண்மையும், லட்சுமி கடாட்சம் பெருக தட்சணையும், வித்யாதான பலன் பெற ஸ்லோக புஸ்தகமும், வஸ்திர தானப் பலன் அடைய ரவிக்கைத்துணி அல்லது புடவையும் வழங்கப்படுகிறது.
அம்பிகையைத் திருப்தி செய்வதே தாம்பூலம் வழங்குவதன் நோக்கம். தாம்பூலம் அனைவருக்கும் வழங்கும் போது, ஏதாவது ஒரு ரூபத்தில் அம்பிகையும் வந்து தாம்பூலம் பெற்றுக் கொண்டு நம்மை வாழ்த்துவாள்.அப்படியிருக்க, தாம்பூலம் வழங்குவதில் பேதம் பார்ப்பது, தேவியை அவமதிப்பதற்கு சமம். மேலும் நவராத்திரிகளில் ‘கன்யா பூஜை’ செய்து, சிறு பெண் குழந்தைகளுக்கு போஜனம் கொடுத்து, நலங்கு வைத்து, உடை, கண்மை, பொட்டு, பூ, பழத்தோடு கூடிய தாம்பூலம் வழங்குவது அளவற்ற நன்மையை கொடுக்கும். நம் மூதாதையரைத் திருப்தி செய்து, நம் சந்ததியரை வாழ்வாங்கு வாழ வைக்க அவர்களுக்கு நாம் அளிக்கும் பொருட்கள் பலன் தரும்.
தாம்பூலம் கொடுப்பவர் கிழக்குப் பார்த்து நின்று கொடுக்க, பெற்றுக்கொள்பவர் அவர் எதிரே சிறு மனை அல்லது பாய் போட்டு அமர்ந்து வாங்க வேண்டும். பின்னர் நலங்கு இட்டு, முதலில் குடிக்க பானம் கொடுத்திட வேண்டும் இல்லையென்றால் தண்ணீராவது கொடுத்திட வேண்டும். மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவை தருவதோடு, தேங்காயில் லேசாக மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து, அதைத் தாம்பூலப் பொருட்களோடு சேர்த்து, குடுமிப் பகுதி அம்பாளைப் பார்த்து இருக்கும்படி காட்ட வேண்டும். தட்டில் வைத்துத்தான் தாம்பூலப் பொருட்களை தர வேண்டும்.
இப்படி நாம் தரும் தாம்பூல உபசாரத்தில் அன்னை ஆதிபராசக்தியானவள் உள்ளம் மகிழ்ந்து சகல சவுபாக்கியங்களையும் தந்தருளி தீர்க்க சுமங்கலியாக வைத்திருப்பாள். உங்கள் கொலுவில் தாம்பூலத்தை அளிக்கும் போது இதையெல்லாம் கடைபிடியுங்கள்.