மகா சிவராத்திரி 2023: அய்யன் சிவனின் அருளைப் பெற வாழ்வில் ஒருமுறையாவது இந்த விரதம் இருக்கணும்.. ஏன் தெரியுமா?
இன்பம் தரும் இரவு சிவராத்திரி, சிவபெருமானின் அருள் வாய்க்கப் பெற்றவர்களும், சிவனருள் வேண்டும் என நினைப்பவர்களும் மகா சிவராத்திரி அன்று விரதம் இருந்து வழிபடுவர்.
அய்யன் சிவனின் பூரண அருளை பெற சிவராத்திரி பூஜைகள் முக்கியமாக கருதப்படுகிறது. மனிதர்களின் மனதில் குடிகொண்டிக்கும் தீய சிந்தனைக் குவியலான காமம், கோபம், குரோதம், பேராசை, பொறாமை ஆகிய கழிவு எண்ணங்களை அழிக்க வல்லவர் சிவபெருமான். இவரை வணங்குபவர்களுக்கு வாழ்வில் எந்த நோயும், கவலையும் இருக்காது. வறுமையை போக்கி பொருளாதாரம் மேம்பட சிவனருள் தேவை. ஒரு நபர் தன்னுடைய 3 பிறவியில் செய்த பாவங்களையும் பனி போல கரைய செய்பவர் சிவபெருமான். அவருக்கு வாழ்வில் ஒருமுறையாவது விரதமிருந்து வழிபட வேண்டும் என்கின்றனர் பெரியவர்கள்.
மகா சிவராத்திரி சிறப்பு
ஒளிமயமான சிவராத்திரி இரவில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் பாவம் விலகி புண்ணியம் கிடைக்கும். நினைத்த காரியம் கைகூடும். தன்னுடைய வாழ்க்கையில் செய்த கர்ம வினைப்பயனை அழிக்க, 8 விதமான சிவ வழிபாட்டு பூஜைகளை பின்பற்ற வேண்டும் என புராணம் நமக்கு சொல்கிறது. மாசி மாதம் வரும் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதி அன்று கூடி வரும் மகா சிவராத்திரி விரதத்தை செய்வது கூடுதல் பலனளிக்கும்.
வருடம் முழுக்க சிவனுக்கு விரதமிருந்து வழிபாடு நடத்தாவிட்டாலும், மகா சிவராத்திரியில் விரதமிருப்பது நல்ல பலனை அளிக்கும். இந்த விரதத்தை மகா சிவராத்திரிக்கு முந்தைய தினமே தொடங்கிவிட வேண்டும். விரதன் இருக்கும் தினத்தன்று ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிட வேண்டும்.
மகா சிவராத்திரி தேதியும், நேரமும்!
2023இல் மகா சிவராத்திரி பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி, (மாசி 6) சனிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. அதே தினம் மாலை 6 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெறும். அப்போது சிறப்பாக செய்யப்படும் நான்கு கால அபிஷேக பூஜைகளில் பங்கேற்று சிவனை வழிபட்டால் கோடி புண்ணியம் கிடைக்கும்.
இத்துடன் முடியாது. சனிக்கிழமை அபிஷேகம் பார்த்தவர்கள், மறுநாள் ஞாயிரன்று காலையில் நீராடிவிட்டு பகல் முழுவதும் தூங்காமல் இருந்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். ஒருவேளை ஞாயிற்றுக்கிழமை அன்று பகலில் அசதியில் கண் அயர்ந்து தூங்கினால் சிவராத்திரி விரத்தின் முழுப்பலன் கிடைக்காமல் போய்விடும்.
விரதம் இருக்கும் முறை!
மகா சிவராத்திரி தினத்தில் காலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி விட்டு நெற்றியில் விபூதி இட்டு கொள்ளுங்கள். முதன்மையாக பூஜை அறையில் உள்ள சிவபெருமானின் படம் முன்பாக உள்ள தீபத்தை ஒளியூட்டி விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். சனிக்கிழமை அன்று பகல், இரவில் ஆகாரம் ஏதும் சாப்பிடக்கூடாது. தண்ணீர் குடிக்கலாம். சிவ சிந்தனைகளை மனமுருகி ஜெபிக்க வேண்டும்.
உடல் நலன் கருதி முதியவர்கள், நோயாளிகள் பால், பழங்கள், அவல் ஆகியவை உண்ணலாம். அன்றைய தினத்தில் மௌன விரதம் இருந்து, மனதுக்குள் 'பஞ்சாட்சரம்' சொல்லலாம். அதில்லாமல் 'ஓம் நமசிவாய' என உச்சரித்து கொண்டிருந்தால் புண்ணிய பலன் பல மடங்கு கிடைக்கும்.
சிவராத்திரி விரத பலன்கள்
செல்வ செழிப்போடு வாழ்க்கையில் முன்னேற நினைப்பவர்கள் மகா சிவராத்திரியில் மனமுருகி விரதம் இருக்க வேண்டும். மகா சிவராத்திரி தினத்தன்று விரதம் மேற்கொள்பவர்கள் நற்கதி அடைவதோடு, சொர்க்கலோகத்தை சேரும் பாக்கியமும் பெறுவார்கள் என்பது ஐதீகம். முழுமனதோடு விரதம் இருந்தால் எல்லா தோஷங்களும் நிவர்த்தியாகி வாழ்க்கை வளமாகும்.
சிவகதியை அடைய விரும்பும் நபர்கள் தொடர்ச்சியாக 24 ஆண்டுகள் சிவராத்திரி விரதம் இருந்தால் பலன் கிடைக்கும். இத்துடன் அவருடைய 21 தலைமுறைகளுக்கும் நற்கதி கிடைக்கும். குறிப்பாக அசுவமேத யாகம் செய்த பலனை கூட பெறலாம் என்பது ஐதீகம்.
இதையும் படிங்க: கனவுவில் பாம்பு வருதா? செல்வம் கொட்ட போகுது! சிவராத்திரிக்கு முன்பு வரும் கனவுக்கும் சிவனுக்கும் தொடர்பு உண்டு
இதையும் படிங்க: புருவ மத்தியில் விபூதியை பவித்ரமான இந்த விரலில் தொட்டு வைத்தால் தீவினைகளில் தீரும்.. இது உண்மையா?