சித்திரை திருவிழா; கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க கட்டுப்பாடு
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வின் போது பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க கட்டுப்பாடுகளை கோவில் நிர்வாகம் விதித்துள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சித்திரைத் திருவிழா வருகின்ற 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவைத் தொடர்ந்து மீனாட்சி சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் சிம்மம், பூதம் உள்ளிட்ட வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி 4 மாசி வீதிகள், சித்திரை வீதிகளில் உலா வரஉள்ளனர்.
திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் அழகர் கோவிலில் இருந்து மே 3ம் தேதி மாலை கள்ளர் திருக்கோலத்தில் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி மதுரைக்கு புறப்பாடாகிறார். தொடர்ந்து மதுரை மூன்றுமாவடிக்கு மே 4ம் தேதி வந்தடைகிறார். இதனைத் தொடர்ந்து எதிர்சேவை நிகழ்வு நடைபெற உள்ளது.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து ஏப்ரல் 30ம் தேதி முதல் மே 5ம் தெதி வரை என மொத்தமாக 6 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதற்காகவும், குடிநீர் திட்டக் கிணறுகளின் நீர் ஆதாரத்தைப் பெருக்கவும், வைகை அணையில் இருந்து ஏப்ரல் 30 முதல் மே 5 வரை 216 மில்லியன் கனஅடி வரை தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது தண்ணீர் பாக்கெட்டுகளில் இருந்து பக்தர்கள் சுவாமி மீது தண்ணீரை பீய்ச்சி அடிப்பார்கள். இது போன்ற சம்பவத்தின் போது தண்ணீர் பாக்கெட்டை பற்களால் கடித்து அதிலிருந்து சுவாமி மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க வேண்டாம் எ்னறு பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.