இந்தியாவின் ஆன்மிக மரபில் பெண்மையைப் போற்றும் வகையில் சில ஆலயங்களில் ஆண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மாதவிடாய் காலக் கொண்டாட்டம், புராணச் சாபங்கள் மற்றும் பெண் தெய்வங்களின் தனித்துவமான சடங்குகளே இதன் பின்னணியில் உள்ளன. இவை வெறும் தடைகள் அல்ல, பெண் சக்தியின் உன்னதத்தை உலகிற்கு உணர்த்தும் புனிதமான மரபுகளாக கருதப்படுகின்றன.
பொதுவாகவே, சபரிமலை ஐயப்பன் கோவில், மகாராஷ்டிரா சனி பகவான் கோவில் போன்ற கோவில்களில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற செய்திகளைத் தான் நாம் அதிகம் கேட்டிருப்போம். ஆனால், பல நூற்றாண்டுகளாக நம் மண்ணில் நிலைத்திருக்கும் சில ஆலயங்களில், ஆண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதும், பெண்கள் மட்டுமே அங்கு வழிபாடு, பூஜைகள் நடத்துவதும் பலரும் அறியாத ஒரு ஆன்மிக ஆச்சரியம். இது ஏதோ ஒரு தடையல்ல, பெண்ணியத்தின் உன்னதத்தை உலகிற்கு உரக்கச் சொல்லும் மரபு. அந்த மர்மமான மற்றும் ஆச்சரியமான ஆலயங்களைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
ஆண்கள் அனுமதிக்கப்படாத ஆலயங்கள் :
1. ஆட்டுக்கால் பகவதி அம்மன் கோவில்:
கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஆட்டுக்கால் பகவதி அம்மன் கோவில், கின்னஸ் சாதனையிலேயே இடம் பிடித்துள்ளது. இங்கு நடக்கும் பொங்கல் திருவிழா முழுக்க முழுக்க பெண்களுக்கானது. லட்சக்கணக்கான பெண்கள் ஒரே நேரத்தில் பொங்கலிடும் காட்சியைப் பார்க்கவே கண்கள் கோடி வேண்டும். அந்த சமயத்தில் கோவிலைச் சுற்றி ஆண்கள் நடமாட அனுமதி இல்லை. அதே போல் இக்கோவிலில் சில வழிபாடுகளை பெண்கள் மட்டுமே செய்ய அனுமதி உண்டு.
2. சக்குளத்துகாவு பகவதி கோவில் :
கேரளாவின் மற்றுமொரு அதிசயம் 'சக்குளத்துகாவு' பகவதி கோவில். இங்கு ஆண்டுதோறும் 'நாரி பூஜை' என்றொரு சடங்கு நடக்கும். அந்த நாளில், ஆண்களுக்குக் கோவிலுக்குள் அனுமதி கிடையாது. மாறாக, கோவிலின் தலைமை அர்ச்சகர் பெண்களின் பாதங்களைக் கழுவி அவர்களைத் தெய்வமாக வழிபடுவார். இது பெண் சக்தியை போற்றும் வழிபாடாக கருதப்படுகிறது. இப்படி செய்வதால் பகவதி அம்மன் மனம் மகிழ்ந்து, ஊரை செழிக்க வைப்பாள் என்பது ஐதீகம்.
3. கன்னியாகுமரி பகவதி அம்மன் :

இந்தியாவின் தென்கோடியில் அலைகளுக்கு நடுவே அமர்ந்திருக்கும் கன்னியாகுமரி அம்மன் கோவில், மிகக் கடுமையான விதிகளுக்குப் பெயர் பெற்றது. இங்குள்ள கருவறைக்குள் திருமணமான ஆண்களுக்கு அனுமதி இல்லை. இந்த அம்மன் சிவபெருமானைத் திருமணம் செய்யக் காத்திருப்பதாக ஐதீகம். அந்தத் தவத்திற்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதாலேயே இந்த விதிமுறை கடைபிடிக்கப்படுகிறது. சன்னியாசம் பூண்ட ஆண்களுக்கு மட்டுமே சில நேரங்களில் விலக்கு அளிக்கப்படுகிறது.
4. காமாக்யா தேவி:
அசாமில் உள்ள காமாக்யா கோவில் ஒரு சக்தி வாய்ந்த 'சதி பீடம்'. இங்கு அம்மனின் மாதவிடாய் காலம் 'அம்புபாச்சி மேளா' என்ற பெயரில் அனுசரிக்கப்படுகிறது. அந்த மூன்று நாட்கள் கோவில் கதவுகள் மூடப்படும். அந்தப் புனிதமான நாட்களில் ஆண்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை. பெண்மையின் இயற்கைச் சுழற்சியை இழிவுபடுத்தாமல், அதைக் கொண்டாடும் உலகின் ஒரே கோவில் இதுதான்.
5. புஷ்கர் பிரம்மா கோவில்:
ராஜஸ்தானில் உள்ள இந்தத் தலம், உலகில் பிரம்மாவுக்கு இருக்கும் மிகச் சில கோவில்களில் ஒன்று. இங்கு திருமணமான ஆண்கள் கருவறைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புராணக் கதைகளின் படி, ஒரு யாகத்தின் போது சரஸ்வதி தேவி வராததால், பிரம்மா காயத்ரி தேவியைத் திருமணம் செய்து யாகத்தைத் தொடங்கினார். இதனால் கோபமடைந்த சரஸ்வதி தேவி, "இந்தக் கோவிலுக்குள் திருமணமான ஆண்கள் நுழைந்தால், அவர்களின் இல்லற வாழ்க்கை பாதிக்கும்" எனச் சாபமிட்டதாகக் கூறப்படுகிறது.
6. ஜுவாலா முகி கோவில்:

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்தத் தலம் மிகவும் விசித்திரமானது. இங்கு அம்மனுக்கு உருவம் கிடையாது. பாறையில் இருந்து வெளிப்படும் இயற்கை நெருப்பே தெய்வம். சில குறிப்பிட்ட பூஜைகளின் போது ஆண்கள் ஒதுங்கி நிற்க வேண்டும் என்பது மரபு. அம்மனின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படும் இக்கோவிலில் சுடர் வடிவிலேயே அம்மன் வழிபடப்படுகிறாள். இயற்கையான எரிவாயு கசிவு காரணமாக, கோவிலின் உள்ளே ஒன்பது வெவ்வேறு சுடர்கள் (மகாகாளி, அன்னபூர்ணா, சண்டி, ஹிங்லாஜ், வித்யா, பஸ்னி, மஹா லக்ஷ்மி, சரஸ்வதி, அம்பிகா) தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கின்றன.
7. சந்தோஷி மாதா:
வெள்ளிக்கிழமைகளில் சந்தோஷி மாதா கோவில்களில் நடக்கும் வழிபாடுகள் மிகவும் பிரபலம். அன்று ஆண்கள் கருவறைக்குள் செல்வது தவிர்க்கப்படுகிறது. குறிப்பாக, புளிப்புப் பொருட்களை உணவில் சேர்க்காமல் பெண்கள் மேற்கொள்ளும் இந்த விரதத்தின் போது, தூய்மை கருதி ஆண்கள் ஒதுங்கியிருப்பதே வழக்கம்.சந்தோஷி மாதா மகிழ்ச்சி மற்றும் திருப்தியின் தெய்வமாக வணங்கப்படுகிறார். பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற, இந்த அம்மனுக்கு சிவப்பு நிறப் பூக்கள் மற்றும் ஆடைகளைச் சமர்ப்பித்து வழிபடுகின்றனர்.


