Asianet News TamilAsianet News Tamil

ஆவணி அவிட்டத்தில்  பூணூல் போடுவது ஏன்? துன்பங்கள் விலக்கும் கள்ளப்பூணூல் உள்ளிட்ட 4 பூணூல்களின் விளக்கம் இதோ!!

Avani Avittam  2024 : ஆவணி அவிட்டம் அன்று அணியக் கூடிய பூணூல் வகைகள், அந்நாளில் செய்ய வேண்டிய வழிபாடு குறித்த முழுவிளக்கத்தை இந்தப் பதிவில் காணலாம். 

avani avittam 2024 types of poonal and worship in tamil mks
Author
First Published Aug 16, 2024, 5:00 PM IST | Last Updated Aug 16, 2024, 5:00 PM IST

ஆவணி அவிட்டம் என்பது ரிக், யசுர் வேதிகள் கொண்டாடும் நாளாகும். இது தவிர சாம வேதிகள் விநாயகர் சதுர்த்தி நாளன்று கொண்டாடுவது வழக்கம். ஆவணி அவிட்டம் என்ற ஆண்டு சடங்கினை எல்லோரும் செய்யமுடியாது. முறையாக உபநயனம் செய்த  பிராமணர்கள் தான் செய்வார்கள். இதனை ஆடி மாதம் அல்லது ஆவணியில்  அவிட்டம் நட்சத்திரத்துடன் வரும் பெளர்ணமி அன்று கடைப்பிடிப்பார்கள்.  

ஆவணி அவிட்டம் 2024 எப்போது? 

ஆவணி அவிட்டம் வருகின்ற ஆகஸ்ட் 19ஆம் தேதி, திங்கள் கிழமை அன்று கொண்டாடப்படவுள்ளது. 

ஆவணி அவிட்ட கொண்டாட்டம் எப்போதும் நீர்நிலைகளில் தான் இருக்கும். வசதிக்கேற்றார் போல ஆற்றங்கரை, குளக்கரை என ஏதேனும் ஒரு நீர்நிலை சென்று அங்கு குளித்துவிட்டு இந்த சடங்கை செய்வார்கள். விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கும் இந்த விரதமானது புண்யாவாகனம் செய்து முடித்த பிறகு பஞ்சகவயம் குடித்து நிறைவு செய்யப்படும். உடல், உள்ளம், இருப்பிடம் ஆகியவற்றை சுத்தமாக்கி கொள்வது கட்டாயம். 

கிழக்கு திசை நோக்கி வாழை இலையை வைக்க வேண்டும். அந்த இலையை சுத்தம் செய்து அரிசியை பரப்பி வையுங்கள். அரிசியின் மீது 7 கொட்டை பாக்கு வைத்துவிட்டு, சப்தரிஷிகளை வரவழைக்கும் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். பின்னர் மனத்தூய்மையோடு தீபாராதனை காட்ட வேண்டும்.  ஏற்கனவே செய்த நைவேத்தியத்தை படைத்து பஞ்சபூதங்களை வழிபட வேண்டும். 

தர்ப்பணம் செய்வது எப்படி?

கல்யாணம் ஆகாத ஆண்கள் தங்கள் பூணூலை குருவுக்கும், வயதில் மூத்தோருக்கும் தானம் செய்யலாம். அதே நேரம் புதியதாக பூணூல் போட்டுள்ளவர்கள் முதலில் தேவர்கள் மற்றும் ரிஷிகளுக்கு தர்ப்பணம் செய்வார்கள். தந்தையை இழந்தவர்கள்  முன்னோருக்காக எள், அரிசி ஆகியவற்றை நீரில் கொடுத்து தர்ப்பணம் செய்வார்கள். இதனை செய்த பின்னரே பூணூல் புதுப்பித்து வேதங்களை படிக்கத் தொடங்க வேண்டும். இந்நாளே  வேதங்களைப் படிக்கத் தொடங்க ஏற்ற நல்ல தினம் என சொல்லப்படுகிறது.  குறிப்பாக இந்த தினத்தில் முறையாக விரத நியமங்களைப் பின்பற்றி  பூணூல் அணிந்தவர்களுக்கு எத்தீங்கும் ஏற்படாது. அவர்கள் குடும்பத்தை துன்பங்கள் நெருங்காது. பகைவர்கள் செய்யும் கெட்ட காரியங்களில் இருந்து விலக்கி காக்கப்படுவார்கள். 

பூணூலின் வகைகளும், விளக்கமும்: 

பூணூலில் 4 வகைகள் உள்ளன. அவை கள்ளப்பூணூல், கிரஹஸ்தர் பூணூல், பிரம்மச்சாரி பூணூல், சஷ்டிஅப்த பூர்த்தி பூணூல் என்பவன ஆகும். 

பூணூல் அணியப் போகும்  ஆண் சிறுவனாக இருக்கும்போது பிரம்மச்சாரி என்ற அந்தஸ்து பெறுகிறார். இந்த ஸ்தானம் அவருக்கு கொடுக்கப்பட்ட பின்பு வேதங்களை பயில வேண்டும். குறிப்பாக பிரம்மச்சரிய விரதம் பின்பற்ற  வேண்டும்.

பூணூல் அணிவதற்கு சில விதிகள் உண்டு. அதன்படி, பிரம்மச்சாரி பூணூல் அணிந்த நபர், உபநயன விழாவில் பூணூல் அணிந்து கொண்டால் அதன் பிறகு அதனை கழற்றக் கூடாது. அதே நேரம்
உபநயன விழாவில் பூணூல் அணியாமல் ஆவணி அவிட்டம் நாளன்று சாஸ்திரமாக போட்டுவிடப்படும் பூணூலைக் கழற்றலாம். இப்படி அவிழ்த்து கொள்ளும் பூணூலை தான் கள்ளப் பூணூல் என சொல்வார்கள். கல்யாணம் ஆகாதவருக்கே பிரம்மச்சாரி பூணூல் அணிவிக்கப்படும். பிரம்மச்சாரி பூணூல், கள்ளப் பூணூலில் 3 நூல்கள் சேர்த்து கட்டுவார்கள். இதன் மத்தியில் பிரம்ம முடிச்சிடப்பட்டிருக்கும். 

கிரஹஸ்தர் பூணூல் என்றால் என்ன? 

கல்யாணம் செய்தவர்களுக்கே கிரஹஸ்தர் பூணூல் அணிவிக்கப்படும். இதில் 6  நூல்கள் சேர்த்து முடிச்சிடுவார்கள். 

சஷ்டி அப்தி பூணூல் என்றால் என்ன? 

அறுபது வயதுக்கு பின்னர் சஷ்டி அப்தி பூர்த்தி என சொல்லப்படும் அறுபதாம் கல்யாணம் செய்தவர்களுக்கு மட்டுமே சஷ்டி அப்தி பூணூல் போடப்படும். இதில் ஒன்பது நூல்கள் சேர்த்து கட்டி, பிரம்ம முடிச்சு போட்டிருப்பார்கள். 

ஆவணி அவிட்ட விரத பலன்கள்:

பிராமணர்கள் ஆவணி அவிட்டம் அன்று விரத நியமங்களை முறையாக பின்பற்றி பூணூல் போட்டு கொண்டால் எல்லா துன்பங்களுக்கும் விலக்கி காக்கப்படுவார்கள். அவர்களின் குடும்பத்தை துன்பங்கள் அணுகாது என்பதே ஐதீகம். இந்நாளில் பூணூல் அணிபவர்களுக்கு பகைவர்களின் தொல்லையே இருக்காது. வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும் என நம்பப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios