மகாவிஷ்ணுவின் அருளை வாரி தரும் ஏகாதசி விரதம்.. இப்படி செய்தால் அதிக பலன் கிடைக்கும்
மாசி மாத வளர்பிறை ஏகாதசியில் விரதமிருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை காணலாம்.
ஏகாதசி திதி என்றாலே விஷ்ணுவின் வழிபாட்டு நாள் தான். நாம் இருக்கும் விரதங்களில் ஏகாதசி விரதம் தான் அதிகம் புண்ணியம் அளிக்கும் விரதமாக கருதப்படுகிறது. இப்படி ஏகாதசியில் விரதம் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் எல்லா நலன்களும் கிடைக்கும் என விஷ்ணு புராணம் நமக்கு விளக்குகிறது.
திதிகளில் பதின்றொவது திதியாக வருவது ஏகாதசி, வளர்பிறை, தேய்பிறை முறையே ஒவ்வொரு மாதத்திற்கும் இரண்டு ஏகாதசிகள் உண்டு. இப்படி ஆண்டுக்கு 24 ஏகாதசிகள் இருக்கின்றன. அவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள், சிறப்பு பலன்கள் உள்ளன. இதில் மாசி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசியை தான் ஆமலகி ஏகாதசி என்கிறோம்.
ஆமலகி ஏகாதசி
மாசி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசி அன்று மனதார வேண்டி விரதம் இருந்தால் விஷ்ணு பகவானின் ஆசியுடன் மகாலட்சுமியின் அருளை கூடவே பெறலாம். ஆமலகி ஏகாதசி விரதம் வடஇந்தியாவில் பிரசித்தி பெற்றது. அங்கு இந்த நாளில் நெல்லி மரத்திற்கு பூஜைகள் செய்து, விரதம் இருப்பார்கள். நெல்லி மகாலட்சுமியின் அம்சமாகவும் கருதப்படுகிறது.
ஆமலகி ஏகாதசி 2023 தேதி
மாசி மாத ஏகாதசி பால்குண மாதத்தில் (பிப்ரவரி-மார்ச்) சுக்ல பக்ஷத்தில் அனுசரிக்கப்படும் இந்து பண்டிகையாகும். இந்தாண்டு மாசி மாத ஏகாதசி மார்ச் 3ஆம் தேதியான நாளை (வெள்ளி) கொண்டாடப்படுகிறது. ஏகாதசி திதி மார்ச் 2 ஆம் தேதி காலை 6:39 மணிக்கு தொடங்குகிறது. மார்ச் 3 ஆம் தேதி காலை 9:11 மணிக்கு முடிவடைகிறது.
விரத பலன்
சக்தி வாய்ந்த இந்த விரதம் இருப்பதால் நல்ல அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு, இன்பம் ஆகியவை கூடிவரும். உங்களின் பாவங்கள் தீர்ந்து, திருமாலின் பரிபூரண அருள் கிடைக்கும். எல்லா பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, வளமாக வாழ இந்த விரதம் துணைபுரியும். பெருமாள் பாசுரங்கள் பாடி பூஜிப்பதோடு, அன்றைய தினம் லட்சுமியையும் வழிபட்டால் கூடுதல் பலன் கிடைக்கும்.
இதையும் படிங்க: மாசி மகம் நாளில் வீட்டிலேயே புனித நீராடி முழுபலனை அடைவது எப்படி ?
விரதம் முறை
ஆமலகி ஏகாதசி அன்று விரதம் இருக்க நினைத்தால் அதிகாலையில் எழுந்து, குளிர்ந்த நீரில் நீராடி, விஷ்ணு பகவானை வழிபட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து, மறுநாள் காலை பூஜை செய்த பின் விரதம் முடிக்க வேண்டும். விரதம் இருக்கும்போது திருமாலின் நாமத்தை உச்சரிக்கவேண்டும். தேவையுள்ள எளியவர்களுக்கு உணவு, உடை போன்ற அத்தியாவசிய பொருட்களை தானம் செய்யலாம். ஏகாதசி அன்று பெருமாலுக்கு நெல்லிக் காய் நைவேத்தியம் வைத்து வழிபடலாம். உங்கள் வீட்டின் அருகே ஏதேனும் நெல்லி மரம் உண்டெனில் அதற்கு தீபாராதனை, தூபராதனை காட்டி வழிபடுங்கள்.
இதையும் படிங்க: உங்க நாக்கின் வடிவம் நிறம் இப்படி இருந்தால் நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி.. சாமுந்திரிகா லட்சணம் சொல்வது என்ன?