தமிழ் சினிமாவில் வெள்ளிவிழா நாயகனாக கொண்டாடப்பட்ட நடிகர் மோகனின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
Silver Jubilee Star Mohan : 80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் என இரு துருவங்கள் உச்சத்தில் இருந்த நேரத்தில் தமிழ் மக்கள் மனதில் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட நாயகன் மோகன். வெள்ளி விழாக்களை சில ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்திருந்தார் என்று கூட சொல்லலாம். இவரது தொடர் வெற்றியை பார்த்து மிரண்ட அப்போதைய உச்ச நட்சத்திரங்கள் தூக்கத்தை தொலைத்தார்கள். எனவே தான் அவரை வெள்ளி விழா நாயகன் என்று தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கொண்டாடினார்கள்.
குறைந்த பட்ஜெட்டில் அவரை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் நல்ல லாபம் பார்த்தனர். மோகன் ராசியான நடிகர் மட்டுமில்லை, படப்பிடிப்பிற்கு சரியான நேரத்தில் வந்துவிடுவாராம். அதேபோல் ஷூட்டிங் ஸ்பாட்டில் கெடுபிடிகள் எதுவும் செய்யமாட்டார் என்பதால் தயாரிப்பாளர்கள் மதிப்பில் நன்மதிப்பை பெற்றிருந்தார் மோகன். இவர் படம் என்றாலே பாடல்கள் நன்றாக இருக்கும், படமும் போர் அடிக்காது. குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கலாம் என்கிற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் விதைத்தவர் மோகன்.
மோகன் நடிகனானது எப்படி?
கர்நாடகா மாநிலம் உடுப்பியில் 1956-ம் ஆண்டு ஆகஸ்ட் 23ந் தேதி பிறந்தார் மோகன். இவரின் இயற்பெயர் மோகன் ராவ். இவரது தந்தை பெங்களூருவில் ஓட்டல் நடத்தி வந்தார். பெங்களூருவிலேயே படிப்பை முடித்த மோகனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகம் இருந்தது. எனவே அங்கிருந்த நாடக குழுக்களில் சேர்ந்து நடித்து வந்தார். அப்படி ஒருமுறை பெங்களூரு சென்ற பிரபல ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திராவின் கண்களில் பட்ட மோகன், அவரின் இயல்பான நடிப்பும் தோற்றமும் பாலுமகேந்திராவை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
எனவே தான் இயக்கிய முதல் படமான கோகிலாவில் மோகனுக்கு வாய்ப்பு கொடுத்தார் பாலு மகேந்திரா. கமல் ஹீரோவாகவும், ஷோபனா நாயகியாகவும் நடித்திருந்த இப்படத்தில் மோகன் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இதையடுத்து மூடுபனி படம் மூலம் தமிழில் அறிமுகமானார் மோகன். இந்த வாய்ப்பையும் அவருக்கு கொடுத்தது பாலு மகேந்திரா தான். மூடுபனி படத்தில் புகைப்படக் கலைஞராக நடித்தார் மோகன். இந்த படத்தில் நான்கு காட்சிகளில் மட்டுமே வந்து போவார் மோகன்.

கனவு நாயகனாக வலம் வந்த மோகன்
இதையடுத்து இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் சுஹாசினியின் காதலராக நடித்தார் மோகன். சுஹாசினியின் அண்ணனாக சரத்பாபு, கணவராக பிரதாப் போத்தனும் நடித்தனர். இதில் மோகனுக்கு சிறிய கதாபாத்திரம் தான் என்றாலும் கார் மெக்கானிக்காக நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார் மோகன். மூடுபனியும், நெஞ்சத்தை கிள்ளாதேவும் 1980-ம் ஆண்டு அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.
1981-ம் ஆண்டு வெளிவந்த கிளிஞ்சல்கள் திரைப்படம் தான் மோகனுக்கு ஒரு கதாநாயகனுக்குரிய வெற்றிப்பாதையை அவருக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. ஒரு வழக்கமான ஹீரோக்களுக்கான பந்தா இல்லாமல், இயல்பான தோற்றத்துடன் நடித்த மோகனை, அன்றைய தலைமுறை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தார்கள். நடிகர் கமல்ஹாசனுக்கு பிறகு அதிக ரசிகைகளை கொண்ட நடிகர் என்றால் அது மோகன் தான். தனக்கு வரும் கணவர் மோகனை போல் இருக்க வேண்டும் என்று கனவு கோட்டை கட்டிய பெண்கள் அப்போது ஏராளம்.
மோகன் - இளையராஜா கூட்டணி
மோகனின் வெற்றிக்கு இளையராஜாவின் பாடல்களும் உறுதுணையாக இருந்தது என்றால் அது மிகையில்லை. ஒரு இயல்பான கதையை சுவாரஸ்யமாக சொல்லும் இயக்குனர்களும் இளையராஜாவின் இசையும் அமைந்துவிட்டால் அது நிச்சயம் வெற்றிபெறும் என்கிற நிலை அந்த காலகட்டத்தில் இருந்தது. அப்படியான படங்கள் மோகனுக்கு அமைந்தன. மோகன் நடிப்பில் வெளியாகி மிக பிரம்மாண்ட வெற்றிபெற்ற பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்தது இளையராஜா தான்.
பயணங்கள் முடிவதில்லை படத்தில் தான் முதன்முறையாக மோகன் மைக் பிடித்து பாடி இருப்பார். இதனால் அவரை மைக் மோகன் என அழைக்க பிள்ளையார் சுழி போட்டது இந்த படம் தான். படத்தில் மோகன் மைக்கோடு தோன்றினால் படம் சூப்பர் ஹிட்டாகும் என்கிற செண்டிமெண்டும் அப்போது இருந்துள்ளது. அவர் கதாநாயகனாக உச்சத்தில் இருந்தபோதே பிளே பாய், வில்லன் போன்ற கதாபாத்திரத்திலும் அவர் நடிக்க தயங்கியதில்லை.
மோகன் வீழ்ந்தது எப்படி?
1986-ம் ஆண்டு மட்டும் 9 படங்களில் மோகன் நடித்தார். அதில் இரண்டு படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. ஒன்று மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த மெளன ராகம் மற்றொன்று ஆர், சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான மெல்ல திறந்தது கதவு திரைப்படம். இந்த படத்தில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இதற்கு இளையராஜா, எம்.எஸ்.வி என இரு ஜாம்பவான்கள் இசையமைத்தனர்.
இப்படி தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த மோகனுக்கு 1990-களில் பெரிய பட வாய்ப்புகள் அமையவில்லை. சினிமாவை பொறுத்தவரை ஓடும் குதிரை மேல் தான் பணத்தை கொட்டுவார்கள். ஆனால் மோகன் ஓடிக்கொண்டிருக்கும்போதே அவரின் திரை வாழ்க்கையில் தேக்கம் ஏற்பட்டது. 1999-ம் ஆண்டு அன்புள்ள காதலன் படத்தை தானே தயாரித்து நடித்தார் மோகன். ஆனால் அப்படம் சரியாக போகவில்லை. இதையடுத்து சில ஆண்டுகளுக்கு பின் சுட்ட பழம் என்கிற படத்தில் நடித்தார் மோகன். அப்படமும் பெரிதாக பேசப்படவில்லை. அறிமுகமானபோது இருந்த அதே வசீகர தோற்றத்துடன் இப்போதும் வலம் வருகிறார் மோகன். அவர் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சிலும் கோலோச்சுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
