பிரேமம் மேஜிக் மீண்டும் ஒர்க் அவுட் ஆனதா..? நயன்தாராவின் ‘கோல்டு’ எப்படி இருக்கு? - டுவிட்டர் விமர்சனம் இதோ
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிருத்விராஜ், நயன்தாரா நடிப்பில் வெளியாகி உள்ள கோல்டு திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நிவின் பாலி, நஸ்ரியா மற்றும் பாபி சிம்ஹா நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு ரிலீசான நேரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் நிவின் பாலி உடன் கூட்டணி அமைத்த அல்போன்ஸ் புத்திரன், அவரை வைத்து பிரேமம் படத்தை இயக்கினார்.
பிரேமம் திரைப்படம் கடந்த 2015-ம் ஆண்டு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இது மலையாள படமாகவே வெளியிடப்பட்டாலும், தமிழ்நாட்டில் இப்படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. பிரேமம் படத்துக்கு பின்னர் கடந்த 7 ஆண்டுகளாக அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் எந்தவித படமும் ரிலீசாகாமல் இருந்த நிலையில், தற்போது கோல்டு என்கிற படத்தின் மூலம் அவர் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... விநியாகஸ்தராக விஸ்வரூப வெற்றிகண்ட உதயநிதி..! அடேங்கப்பா... ஒரே வருடத்தில் அவர் சம்பாதித்தது இத்தனை கோடியா?
கோல்டு படத்தில் பிருத்விராஜ் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கும் இப்படம் டிரைலர், டீசர் என எந்தவித புரமோஷனும் இன்றி திரையரங்குகளில் இன்று ரிலீசாகி உள்ளது. இப்படத்தின் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படம் குறித்த தங்களது விமர்சனத்தை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அதன்படி கோல்டு படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது : “அல்போன்ஸ் புத்திரனின் தனித்துவமான படத்தொகுப்பு மற்றும் மேக்கிங் ஸ்டைலுக்காக கோல்டு படத்தை பார்க்கலாம். முதல் அரைமணி நேரம் நன்றாக சென்றுகொண்டிருந்த படம் போகப் போக சலிப்படையச் செய்கிறது. கைதட்டி சிரிக்கும் அளவுக்கு ஆங்காங்கே காமெடிகள் உள்ளன. ஆனால் பிரேமம் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்காதீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர் போட்டுள்ள பதிவில், “ஏன் அல்போன்ஸ்.. ஏன்? பிரேமம், நேரம் போன்ற படங்களை கொடுத்த நீங்கள் இதுபோன்று ஒரு படத்தை கொடுப்பீர்கள் என எதிர்பார்க்கவில்லை. சுத்தமாக பிடிக்கவில்லை” என சோகத்துடன் பதிவிட்டுள்ளார்.
அதேபோல் இன்னொரு டுவிட்டில், “கோல்டு திரைப்படத்தின் ரன்னிங் டைம் அதிகமாக உள்ளது. சுமாரான கதை மற்றும் அதை எடுத்த விதமும் புதுமையாக இல்லாததால் படம் சொதப்பல்” என பதிவிட்டுள்ளார்.
மேற்கண்ட விமர்சனங்களை பார்க்கும்போது கோல்டு திரைப்படம் பிரேமம் அளவுக்கு இல்லை என்பது உறுதியாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் வீட்டில் திடீரென மயங்கி விழுந்த அசீம்... பதறிப்போன ஹவுஸ்மேட்ஸ் - வெளியான ஷாக்கிங் வீடியோ