விமர்சனம் ‘பிகில்’... ஷேம்சைட் கோல் அடித்த அட்லி, விஜய்..!
எப்போதும் ராயப்பன் விஜய், மகன் மைக்கேலிடம் கப்பு முக்கியம் கப்பு முக்கியம் என டயலாக் பேசுவார். அட்லி, விஜய்க்கு கதையும் முக்கியம் என்பது தெரியாமல் போய் விட்டதே..!
திருட்டுக்கதைப் பஞ்சாயத்துகள் பரபரப்பாக நடந்து முடிந்து படம் ரிலீஸான பிறகு....’பாஸ் இந்தக் கதைக்கா இவ்வளவு கட்டி உருண்டீங்க’என்று ஒவ்வொரு முறையும் பரிகாசமான கேள்விகள் எழுவது வழக்கம். இரண்டு தமிழர்கள் உட்பட ஒரு தெலுங்கு எழுத்தாளரும் உரிமை கொண்டாடிய ‘பிகில்’மட்டும் அந்தப் பரிகாசத்திலிருந்து தப்பி விடுமா என்ன?
அடிதடிகளைக் கிளப்பிய அந்த அபாரமான கதை இதுதான்.
அப்பா ராயப்பன் ரவுடி, மகன் மைக்கேல் புட்பால் ப்ளேயர், ரவுடியிசத்துக்கு வரக்கூடாது என அப்பா மகனுக்கு தடை விதிக்கிறார். புட்பால் ப்ளேயராக இருக்கும் மைக்கேல், தனது அப்பா மைக்கேலை ஒரு ரவுடி கும்பல் வெட்டிச் சாய்க்க, ரவுடியாக மாறுகிறார் மைக்கேல். சேரிகளில் இருக்கும் பெண்களை ஒன்று திரட்டி கதிர் மூலம் ஃபுட்பால் பயிற்சி கொடுக்க வைக்கிறார். கதிர் அவர்களை டெல்லியில் நடக்கும் போட்டிகளுக்கு அழைத்து செல்லும்போது கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகிறார். அடுத்து விஜயே சேரி பெண்களுக்கு பயிற்சி கொடுத்து தேசிய அளவில் வெற்றிபெற வைக்கிறார்.
ரவுடியாக விஜய் அலட்டலான நடிப்பு... விஜய் நடிப்பில் அடுத்த பரிமாணத்துக்குச் செல்வதாய் நினைத்து மேனரிசம் என்ற பெயரில் சித்திரவதை செய்கிறார். நயன் தாரா இனிமேல் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போடுவதை கண்டிப்பாகத் தவிர்க்கலாம். தயிர்ச்சாதத்துக்கு ஊறுகாய் என்கிற அளவுக்கே அவரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
கமர்சியல் படங்களுக்கு இசையமைப்பதில்லை என்கிற தனது பிடிவாதத்தில் கொஞ்சம் உறுதியாக இருந்திருக்கலாம் ஏ.ஆர்.ரஹ்மான். பாடல்கள் பின்னணி இசை இரண்டிலும் ஆவ்ரேஜுக்கும் கீழேயே இருக்கிறார்.
படத்தின் பிரதானமான பிரச்சனை, நீளம். தேவையே இல்லாமல் மூன்று மணி நேரம் ஓடுகிறது படம். அதில் இடைவேளைக்கு முன்பாகவே நான்கு சண்டைகள், இரண்டு பாடல்கள். படத்தில் உள்ள ஏகப்பட்ட சண்டைகளையும் பாடல்களையும் நீக்கியிருந்தால் அல்லது குறைந்திருந்தால் படத்தில் அரை மணிநேரம் குறைந்திருக்கும்.முதல் பாதி சண்டையும் பாட்டுமாகக் கழிந்ததென்றால், இரண்டாவது பாதியில் எந்த சுவாரஸ்யமும் இல்லாத ஒரு நீண்ட கால்பந்தாட்ட போட்டியை வைத்து ஒப்பேற்றி அனுப்புகிறார் அட்லி.
படத்தில் விஜய்க்கு தந்தை - மகன் என இரண்டு வேடங்கள். தந்தைக்கும் மகனுக்கும் குரலிலும் மீசையிலும் மட்டும் சின்ன வித்தியாசம். எம்.ஜி.ஆர் காலத்து மாறுவேடங்கள் தோற்றன என்றால் மிகையில்லை. யோகிபாபு, விவேக் ஆகியோர் இருந்தும் சிறு புன்னகைக்குக்கூட நகைச்சுவைக் காட்சிகள் இல்லை. சில இடங்களில் விஜய் நகைச்சுவைக்கு முயற்சிக்கிறார். ஆனால் நமக்குக் கோபம்தான் வருகிறது.
200 கோடி பிரம்மாண்டம் இருந்து என்ன பயன்? உருப்படியான கதை இல்லாமல் கதையடித்தால் விளைவு இப்படி ஒரு வெறித்தனமான ஃப்ளாப்தான் மிச்சம்.
எப்போதும் ராயப்பன் விஜய், மகன் மைக்கேலிடம் கப்பு முக்கியம் கப்பு முக்கியம் என டயலாக் பேசுவார். அட்லி, விஜய்க்கு கதையும் முக்கியம் என்பது தெரியாமல் போய் விட்டதே..!