Vaazhai Review : மாரி செல்வராஜின் பயோபிக்... வாகை சூடியதா வாழை? விமர்சனம் இதோ
மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவரது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள வாழை படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
பரியேறும் பெருமாள் படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அவர், அடுத்ததாக தனுஷ் நடித்த கர்ணன், உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் போன்ற படங்களை இயக்கினார். வரிசையாக மூன்று படங்களும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அவர் இயக்கியுள்ள ஒரு சிறு பட்ஜெட் திரைப்படம் தான் வாழை. இப்படத்தை அவரின் மனைவி திவ்யா தான் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து வாழை திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தை பார்த்த திரைப்பிரபலங்களும் நெட்டிசன்களும் எக்ஸ் தளத்தில் தங்கள் விமர்சனத்தை பதிவிட்டு உள்ளனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... வாழையை வாழ்த்திய வணங்கான்... மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாராட்டிய இயக்குனர் பாலா
வாழை படம் பார்த்த இயக்குனர் பா.இரஞ்சித், திரையில் அதிசயத்தை நிகழ்த்தி இருக்கிறாய் மாரி செல்வராஜ், உன் திரைமொழியில் நான் உருகிவிட்டேன். படத்தில் பணியாற்றிய அத்துணை கலைஞர்களும் மிகச் சிறப்பாக இயங்கி இருக்கிறார்கள்! அனைவருக்கும் என் பேரன்பின் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ள அவர், வாழை அற்புதம் என பாராட்டியும் இருக்கிறார்.
அதேபோல் இயக்குனர் விக்னேஷ் சிவன் போட்டுள்ள பதிவில், மாரி செல்வராஜ், உன் வாழ்க்கையின் நல்ல பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு உன்னுடைய படைப்புகளை பார்க்கத் தொடங்கினேன். மிகவும் பிரமிப்பாக இருந்தது. இப்போது, வாழை படத்தில் உன் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை பார்த்தபின்னர், உன்மீதான மரியாதை ஆயிரம் மடங்காய் அதிகரித்து இருக்கிறது. இனி வரும், உனது படைப்புகள் மீதான மரியாதையும் அவ்வாறே கூடும். வாழையடி வாழையாய் உன் தலைமுறையே சிறக்கும் என பாராட்டி பதிவிட்டுள்ளார் விக்கி.
படம் பார்த்த நடிகர் கார்த்தி, “நம் பால்ய வருடங்களை அனைவராலும் நினைவு கூற முடியும். ஆனால் அதையே ஒரு திரைக்காவியமாய் படைத்து அதில் நம்மையும் உள்ளிழுத்து, நமக்கு மிக நெருக்கமானவராய் ஆகிவிட்டார் மாரி செல்வராஜ். சந்தோஷ் நாராயணனின் இசையையும், தேனி ஈஸ்வரின் காட்சியையும் பயன்படுத்தி வாழ்க்கையின் நிதர்சனத்தையும் அதில் உள்ள வலிகளையும் அழகாய் சொல்லி இருக்கிறார். நடிப்பு என்று எதையும் சொல்லி விட முடியாது படம் அவ்வளவு யதார்த்தமாக உள்ளது. வாழை பார்த்தபின் மாரி செல்வராஜ் மீது பெரும் அன்பு உண்டாகிறது” என பாராட்டி இருக்கிறார் கார்த்தி.
அதேபோல் நெடிசன் ஒருவர் போட்டுள்ள பதிவில், 2024-ம் ஆண்டு கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமாக வாழை உள்ளது. வாழை திரைப்படம் காணும்போது நம் வாழ்வியலை நம் மனதோடு சேர்ந்து பயணிப்போம். தமிழ் சினிமாவில் ஒரு அரிதான படைப்பு என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... ஹாட்ரிக் ஹிட் அடிப்பாரா சூரி? கொட்டுக்காளி முதல் வாழை வரை... இந்த வார தியேட்டர் & OTT ரிலீஸ் படங்களின் லிஸ்ட்