Asianet News TamilAsianet News Tamil

தர்பார் விமர்சனம்: வெறிபிடித்து வேட்டையாடும் ரஜினி... இப்படியொரு படத்தை எடுத்து வைத்து கிழித்திருக்கிறாரே ஏ.ஆர்.முருகதாஸ்..!

என்னதான் ரஜினியை அழகாக காட்டியிருந்தாலும் சில காட்சிகளின் அவரது அசைவுகள் முதிர்ச்சியை காட்டி விடுகின்றன. 

Darbar film review
Author
Tamil Nadu, First Published Jan 9, 2020, 12:57 PM IST

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என அறிவித்தபோதே எதிர்பார்ப்புகள் எகிறியடித்தன. அத்தனை எதிர்பார்ப்புகளையும் ஒற்றை ஆளாக தூக்கி நிறுத்தி இருக்கிறார் ரஜினி. 

ஆக்சன் காட்சிகளில் தாண்டவமாடும், செண்டிமெண்ட் காட்சிகளில் மனதை கரைய வைக்கிறார்.  ரஜினியின் எனர்ஜியும், ஸ்டைலும் இம்மியளவும் குறையவே இல்லை எனக் கூறுவதைவிட இன்னும் மெறுகேறி இருக்கிறது.

Darbar film review

திரைக்கதையில் ஏ.ஆர். முருகதாஸ் மெனக்கெட்டு இருக்கிறார். ஒரே நாளில் 11 ரவுடிகளை எண்கவுண்டர் செய்து பரபரப்பை ஏற்படுத்துகிறார் ஆதித்யா அருணாச்சலமாக வரும் ரஜினிகாந்த். ரவுடிகள் நடுங்கிக் கிடக்க அதில் ஒரு ரவுடி, ‘’நான் மற்ற ரவுடிகளை போல இல்ல. முடிந்தால் என்னை வந்து சந்தித்துப்பார்’’என ஆக்ரோஷமாக பேசி வீடியோ வெளியிடுகிறார். சவால் விட்டாலும் பயத்தில் மிகப்பெரிய டானிடம் சென்று அந்த ரவுடி தஞ்சம் கேட்கிறார்.  அந்த டான்,’’இது என்னோட கோட்டை. அருணாச்சலம் எப்படி உள்ளே வருகிறான் என பார்த்து விடலாம் என இறுமாப்பு கொள்கிறார். கடும் பாதுகாப்பு வளையங்களை மீறி அதிரடியாக எண்ட்ரி கொடுக்கும் காட்சி ரஜினி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்திருக்கும். உள்ளே சென்று துவம்சம் செய்து ரவுடிகளை போட்டுத் தள்ளுகிறார். 

அப்போது மனித உரிமை கமிஷனில் இருந்து என்கவுண்டர் செய்தது குறித்து விசாரணை நடக்கிறது. உண்மையை அறிந்து கொண்ட மனித உரிமை ஆணைய பெண் அதிகாரி ரஜினி மீது நடவடிக்கை எடுக்க அறிக்கை கொடுக்கிறது. ஆனால், அவர்களையே மிரட்டி துப்பாக்கி முனையில் மாற்று அறிக்கை கொடுத்து கையெழுத்திட வைக்கிறார் ரஜினி. Darbar film review

இப்படி செய்ததற்காக ரஜினியை பழிவாங்க வேண்டும் அதிகாரிகள் பேசிக்கொண்டிருக்கும்போது ‘அவரைப்பற்றி எனக்கு தெரியும். திறமையான போலீசார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம். ஏன் இப்படி நடந்து கொள்கிறார் எனத் தெரியவில்லை என விளக்கம் கொடுக்கிறார் மனித உரிமை தலைமை அதிகாரி. 

அப்போது ஃப்ளாஷ்பேக் விரிகிறது. பெயரைக் கேட்டாலே அதிரும் ஆதித்யா அருணாச்சலமாக வரும் ரஜினிகாந்த் மும்பை மாநகரில் தலைவிரித்தாடும் போதைப் பொருள் பிரச்சனையையும், 16 போலீஸாரை கொன்றதால் மக்களிடையே போலீஸாருக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பயெரை தீர்க்க அங்கு அனுப்பப்படுகிறார். போலீஸ் கமிஷனராக இருந்தாலும் சட்டப்படி மட்டுமே நடக்கும் ஆள் இல்லை இந்த ஆதித்யா. 


மும்பை சென்றதுமே மஹாராஷ்டிர மாநில துணை முதல்வரின் மகள் உட்பட மூன்று பேர் கடத்தப்பட்டதாக தகவல் வருகிறது. உடனடியாக களத்தில் இறங்கும் ரஜினி, துணை முதல்வரின் மகளை போதை பொருள் சப்ளை செய்யும் பெரிய தொழில் அதிபரின் மகனான அஜய் மல்ஹோத்ராவை(பிரதீக் பாபர்) பிடிக்கிறார். துணை முதல்வர் மகள் மீட்கப்பட்டதை மறைத்து, அதன் மூலம் துணை முதல்வரின் அதிகாரத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான பெண்களையும் சிறுமைகளையும் மீட்டு, அதன் பிறகு துணை முதல்வரின் மகளை ஒப்படைக்கிறார். 

பிடிபட்ட அஜய் மல்கோத்ரா சிறையில் தன்னைப்போல தோற்றத்தில் இருக்கும் ஒருவரை சிறைக்கு அனுப்பி விட்டு வெளிநாடு தப்பி செல்கிறார். இதனை அறிந்து கொண்ட ரஜினி அஜய் மல்கோத்ராவை தனது சம்யோசித புத்தியால் இந்தியாவில் உள்ள சிறைக்கே வரவழத்து போட்டுத்தள்ளுகிறார்கள். அப்போது தான் தெரிகிறது இறந்து போன அஜய் மகோத்ராவின் தந்தை உலக அளவில் போதைப்பொருட்களை கடத்தும் பயங்கரமான கேங்ஸ்டரான ஹரி சோப்ரா(சுனில் ஷெட்டி) என்பது தெரிய வருகிறது.Darbar film review

அஜய்யை ஒழித்த பிறகு 27 ஆண்டுகளுக்கு முன்பு போலீசாரை காமெடி பீஸாக்கிய பயங்கரமான கேங்ஸ்டரான ஹரி சோப்ரா(சுனில் ஷெட்டி) பழிவாங்க நாடு திரும்பி ஆதித்யா மற்றும் அவரின் மகள் வள்ளியாக வரும் நிவேதா தாமஸ் குறி வைத்துக் கொள்கிறார். விபத்தில் ரஜியும், நிவேதாமஸும் சிக்கி ரஜினி நினைவில்லாமல் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும்போதே மூளையில் நரம்புகள் வெடித்து இரண்டு மணி நேரத்தில் இறக்கிறார் நிவேதா தாமஸ். 

ஏற்கெனவே வேட்டையாடும் போலீஸாரான ரஜினி அதன் பிறகு வெறிபிடித்து துவம்சம் செய்து  ஹரிசோப்ராவுக்கும் அஜய் மல்கோத்ராவுக்கும் இருக்கும் உறவை அறிந்து, இருப்பிடத்தை அறிந்து வில்லனை எப்படி வேட்டையாடி முடிக்கிறார் என்பதே க்ளைமேக்ஸ்.  Darbar film review

முருகதாஸின் முந்தைய படங்களான ரமணா, துப்பாக்கி போன்ற ட்விஸ்ட்டுகளையும், விறுவிறுப்புகளையும் பல மடங்கு தர்பாரில் கூட்டி இருக்கிறார். படத்தின் பலமே ரஜினி, நிவேதா தாமஸ் இடையே பாசக் காட்சிகள் தான். அதிலும் குறிப்பாக ஒரு காட்சியில் நிவேதா தாமஸின் நடிப்பு அருமை. ஆக்ஸன் காட்சிகளில் தெறிக்க விடும் ரஜினி, செண்டிமெண்ட் காட்சிகளில் ரசிகர்களின் மனதை உறைய வைக்கிறார். 70 வயதானாலும் இன்னும் இளமையாக காட்டப்பட்டுள்ளார். 

என்னதான் ரஜினியை அழகாக காட்டியிருந்தாலும் சில காட்சிகளின் அவரது அசைவுகள் முதிர்ச்சியை காட்டி விடுகின்றன.  லில்லியாக வரும் நயன்தாரா, ரஜினி இடையேயான காதல் காட்சிகள் ரசனை. நயன்தாரா பெயருக்கு நான்கு காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார். ஆனாலும் அவர் வந்து போகும் காட்சிகள் கலர்புல். 

வில்லனாக வரும் சுனில் ஷெட்டிக்கு பயங்கரமாக பில்ட்அப் கொடுத்தாலும் சொத்தையான வில்லனாக தெரிகிறார். வில்லன் என்பதால் போலீஸாரை இஷ்டத்துக்கு போட்டுத்தள்ளுகிறார். அவருக்கும், ரஜினிக்கும் இடையேயான மோதல் காட்சிகள் ஆக்‌ஷனாக இருந்தாலும் ரசிகர்களை கவரவில்லை. மாஸ் ஹீரோவான ரஜினியை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே விறுவிறுப்பை குறைத்துள்ளார்கள். 

Darbar film review

சூப்பர் ஸ்டார் என்றும் பாராமல் ஆங்காங்காங்கே கிடைத்த இடங்களில் எல்லாம் ரஜினியை கலாய்த்து காமெடி செய்து சிரிக்க வைக்கிறார் யோகி பாபு. அனிருத் இசையில் சும்மா கிழி பாடல் ரசிகர்களை ஆட்டம்போட வைத்திருக்கிறது. பின்னணி இசை காதுகிழிக்கிறது.  தர்பார் படத்தின் ஒளிப்பதிவு, ஒவ்வொரு காட்சிகளையும் பிரம்மாண்டமாக காட்டுகிறது.
 
ஒவ்வொரு காட்சிகளிலும் விறுவிறுப்பு. ஆனால், படத்தின் கிளைமாக்ஸ் கொஞ்சம் அழுத்தம் இல்லை. மொத்தத்தில் படத்தை ரஜினி என்கிற ஒற்றை ஆளாக தூக்கி நிறுத்தி இருக்கிறார். வழக்கமாக இதுவரை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படங்கள் அவரது படங்களாக மட்டுமே இருக்கும். ஆனால், இது ரஜினிக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட படம்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios