Asianet News TamilAsianet News Tamil

Zee Tv மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.. களத்தில் குதித்த பாஜக.

ஜீ டிவியின் நிறுவனர் சுபாஷ் சந்திரா கோயங்கா ஆவர். இவர் பாஜக மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில்தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பாரத பிரதமரை கேவலமாக சித்தரித்து பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்க பாஜகவுக்கு எதிரான மனநிலையில் உள்ளவர்கள்  தொலைக்காட்சியில் ஊடுருவி திட்டமிட்டு குழந்தைகளை வைத்து விஷத்தை கக்கியுள்ளனர்.

Zee Tv should apologize .. TNBJP Demand.
Author
Chennai, First Published Jan 17, 2022, 11:47 AM IST

பிரதமரை இழிவுபடுத்தும் வகையில் நிகழ்ச்சி தயாரித்து  ஒளிபரப்பு செய்த தனியார் தொலைக்காட்சி ( ஜி தமிழ் )நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளதுடன். அந்த குறிப்பிட்ட  நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வழியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அந்த தனியார் தொலைக்காட்சியில்   தலைமை நிர்வாக அதிகாரிக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அதே நேரத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் எல். முருகன் தன்னை தொடர்பு கொண்டு தகவல் கேட்டறிந்திருப்பதாகவும், இது தொடர்பாக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்திருப்பதாகவும் அண்ணாமலையை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வைத்து பிரதமரின் வெளிநாட்டுப்  பயணம், கருப்பு பண ஒழிப்பு, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை ஏளனம் செய்யும் வகையில் நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டுள்ள நிலையில் அண்ணாமலை இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.  

2014ஆம் ஆண்டு மோடி பிரதமரானது முதல் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பல்வேறு அதிரடி அறிவிப்புக, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் பல திட்டங்கள் வரவேற்பு பெற்றாலும், சில  திட்டங்கள் மக்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கருப்பு பண ஒழிப்புக்காக பிரதமர் மோடி எடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டு மக்களால் இன்றளவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அவரது வெளிநாட்டு பயணங்களும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதாவது  பிரதமர் ஆவதற்கு முன்பு வரை மோடியை ஊடகங்கள் எந்த அளவிற்கு கொண்டாடியதோ அதே அளவுக்கு அவரின் செயல்பாடுகளையும் ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டு ஊடகங்கள் அதில் முன்னணியில் இருக்கிறது என்றே கூறலாம். சமீபகாலமாக திரைப்படங்கள் தொடங்கி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் வரை பிரதமரை விமர்சிப்பது வாடிக்கையாகியுள்ளது. இந்த வரிசையில்தான் தமிழகத்தின் முன்னணி பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் " ஜூனியர் சூப்பர் ஸ்டார்"  என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் மற்றும் திட்டங்களை விமர்சித்து நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டுள்ளது.

Zee Tv should apologize .. TNBJP Demand.

பொங்கல் பண்டிகையை ஒட்டி ஒளிபரப்பான இந்த காமெடி ஷோவில் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர் பங்கேற்றுள்ளனர். அதில் மன்னர் கால கதையினை வைத்து காமெடி செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் கருப்பு பணம் ஒழிப்பு, பணமதிப்பிழப்பு, பிரதமரின் வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் உள்ளிட்டவை குறித்த மறைமுகமாக ஏராளமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதை கண்டு பலரும் ரசித்து சிரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திரமோடியின் நடவடிக்கைகளைதான் பெயர் குறிப்பிடாமல் இந்த நிகழ்ச்சி பேசியிருப்பதாகவும், இது கண்டனத்திற்குரிய செயல் என்றும் பாஜக ஆதரவாளர்கள் கடும் வாதங்களை முன்வைத்து வருகின்றனர். பிரதமரின் மாண்பை குறைக்கும் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதேநேரத்தில் பிரதமருக்கு எதிர் மனநிலையில் இருப்பவர்கள் இதை பல்வேறு சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வைரலாகி வருகின்றனர்.அதாவது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  குழந்தைகள் அனைவரும் 10 வயதிற்கு குறைவானவர்கள்,  குழந்தைகளை வைத்து பிரதமர் மோடியின் திட்டங்களால் ஏற்பட்ட பயன்களை மறைத்து, நகைச்சுவை என்ற பெயரில் பிரதமரின் நடவடிக்கைகள் கேலி, கிண்டல் செய்யப்பட்டுள்ளது.

இது முற்றிலும் உள்நோக்கம் கொண்டது, பிரதமரையும் அவரின் செயல்பாடுகளையும் இழிவு படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. 10 வயது குழந்தைகளுக்கு பிரதமர் திட்டங்களின் சாதக பாதகங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்ள முடியாது, அவர்கள் அதை புரிந்து நடிக்க வாய்ப்பு இல்லை ஆனால் அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் செயலாக சிறிய குழந்தைகளை வைத்து பிரதமரின் திட்டங்களை விமர்சித்துள்ளார். எனவே அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் மற்றும் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பார்வைக்கு இந்த புகார் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே தொலைக்காட்சிகள் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பிரதமரையும், நாட்டையும் அவமதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் எனக்கூறி வந்த அண்ணாமலை இதுவரை கருத்து சுதந்திரம் என்று படைப்பாளிகள் கம்பு சுற்றி வந்தார்கள், இனி பிரதமரையோ அல்லது தாய் நாட்டையோ அவமதித்தால் இனி சும்மா விடமாட்டோம் என சாட்டையை சுழற்ற தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ள அவர், மாண்புமிகு இணை அமைச்சர் எல். முருகன் அவர்கள் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி ஷோவில் பாரதப் பிரதமர் அவர்களின் மாண்பை இழிவுபடுத்துவது போல் பல காட்சிகள் வைத்திருப்பதை கேட்டிருந்தார். உரிதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்திருக்கிறார். அவருக்கு நன்றிகள் என பதிவிட்டுள்ளார். இது ஒருபுறமிருக்க பிரதமரை இழிவுபடுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நிகழ்ச்சி தயாரித்து வெளியிட்டுள்ள ஜி தமிழ் தொலைக்காட்சி நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என அனைவரும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி ஜி நெட்வொர்க்கின் தலைமை நிர்வாக அதிகாரி சிஜூ பிரபாகரன் அவர்களுக்கு தமிழக பாஜக சார்பில் கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில்,  கடந்த ஜனவரி 15ஆம் தேதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது, நகைச்சுவை நிகழ்ச்சி என்ற பெயரில் 10 வயது குழந்தைகள் நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளனர். அந்நிகழ்ச்சியை  பிரபல தமிழ் நட்சத்திரங்கள் நடிகை சினேகா, ஆர்.ஜே மிர்ச்சி செந்தில், தொலைக்காட்சி நகைச்சுவையாளர் அமுதவாணன் உள்ளிட்டோர் அதை தொகுத்து வழங்கியுள்ளனர்.

Zee Tv should apologize .. TNBJP Demand.

அதில் கலந்து கொண்ட சிறுவர்கள் பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் மற்றும் அவரின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை விமர்சித்து பேசுவது போல காட்சிகள் அமைந்துள்ளது. அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் அதை வரவேற்று பாராட்டுகின்றனர், நல்லவை தீயவை அறியாத 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வைத்து பிஞ்சுகள் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் பிரதமர் குறித்து தவறான கருத்துகள் பரப்பப்பட்டு உள்ளது, நிகழ்ச்சி தயாரிப்பாளரின் கருத்து 10 வயது குழந்தைகள் மீது திணிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைகள் அறியாமல் பேசுவதை அந்த நிகழ்ச்சியின் பிரபல தொகுப்பாளர்கள் வரவேற்ற ஆமோதிக்கின்றனர். குழந்தைகள் வாயிலாக தவறான கருத்துக்கள் சமூகத்திற்கு பரப்பப்பட்டுள்ளது. இந்த தவறான கருத்துக்களை குழந்தைகள் வாயிலாக மக்களுக்கு பரப்பப்பட்டுள்ளது.  நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என்ன சொல்லிக் கொடுத்தார்களோ அதைதான் குழந்தைகள் சொல்லி இருக்கிறார்கள். எனவே பிரதமரை அவமதிக்கும் வகையில் நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்பியுள்ள ஜி தொலைக்காட்சி மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடுவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சிக்கு காரணமானவர்களை உடனே பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் அரசியல் நோக்கத்திற்காக குழந்தைகள் தவறாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள், அதற்குரியவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என  அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது, பொழுதுபோக்கு என்ற பெயரில் குழந்தைகள் மூலமாக சமூகத்திற்கு விஷத்தை விதைக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளை இனியும் பொறுக்க முடியாது என பாஜகவினர் பொங்கி வரும் நிலையில் அண்ணாமலை இந்த ஆக்ஷனில் இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே எச்சரித்த அண்ணாமலை:  

தமிழ்நாட்டு ஊடகங்கள் தொடர்ந்து பாரத பிரதமருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன என்பது பாஜகவின் நீண்ட நாளைய குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்று,  பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டபோதே இந்த குற்றச்சாட்டை அண்ணாமலை முன்வைத்தார் என்பதை அனைவரும் அறிவோம்.. " இனி தமிழக ஊடகங்களை நீங்கள் மறந்து விடுங்கள், நம்மைப்பற்றி பொய்யாக செய்தி போடுகிறார்கள் என்ன செய்யலாம் என்பது எல்லாம் மறந்து விடுங்கள், அடுத்த ஆறு மாதத்திற்குள் இந்த ஊடகங்களை நாம் கட்டுப்படுத்தலாம், கையில் எடுக்கலாம், அதைப்பற்றி எல்லாம் நீங்கள் கவலையே பட வேண்டாம், இனி பொய்யான விஷயங்களை எந்த ஊடகமும் செய்யமுடியாது, எல். முருகன் ஜி தான் ஒளிபரப்பு துறை அமைச்சராக இருக்கிறார். அனைத்து ஊடகங்களும் அவரின்கீழ் தான் வரப் போகின்றன என அவர் பேசி இருந்தார். அப்போது பலரும் ஊடகங்களை இப்படித்தான் மிரட்டுவதா என கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான்  ஜீ தமிழ் தொலைக்காட்சி விவகாரத்தில் தமிழக பாஜக சார்பில் அந்நிறுவனத்தின் தலைமை இயக்குனருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தற்போது இதையும் மீண்டும் ஊடகங்களை மிரட்டும் வேலையில் அண்ணாமலை இறங்கிவிட்டார் என விமர்சித்து வருகின்றனர்.

Zee Tv should apologize .. TNBJP Demand.

பிரதமரை விமர்சித்தவர்களுக்கு ஆப்பு நிச்சயம்.. காரணம் இதுதான்.  

ஜி தமிழ் விவகாரத்தில் நிச்சயம் நிகழ்ச்சித் தயாரிப்பாளர், தொகுப்பாளர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜீ டிவியின் நிறுவனர் சுபாஷ் சந்திரா கோயங்கா ஆவர். இவர் பாஜக மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில்தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பாரத பிரதமரை கேவலமாக சித்தரித்து பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்க பாஜகவுக்கு எதிரான மனநிலையில் உள்ளவர்கள்  தொலைக்காட்சியில் ஊடுருவி திட்டமிட்டு குழந்தைகளை வைத்து விஷத்தை கக்கியுள்ளனர். இப்போது வசமாக மாட்டிக் கொண்டனர்  என்பது பாஜகவின் குற்றச்சாட்டாக உள்ளது. ஏற்கனவே  ஜீ தமிழில் பணியாற்றிவரும் கரு.பழனியப்பன் உள்நோக்கத்துடன் கருப்பர் கூட்டம் நாத்திகன் என்ற சுரேந்திரனை சிறப்பு விருந்தினராக வைத்து திருமண முறை குறித்து தாலி அணிவது குறித்த விவாதத்தில் பங்கேற்க வைத்து அவதூறு பரப்பினார், அதேபோல் நிர்வாக தலைமைக்கு தெரியாமலேயே godmen சர்ச்சை படத்தை அவர்கள் தளத்தில் வெளியிட நினைத்தார்கள், பின்பு அதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் நிறுத்திவிட்டார்கள்,  இது அனைத்தையும் பொறுத்துக் கொண்டோம், இப்போது பிரதமர் மோடியை குறி வைத்திருக்கிறார்கள் இதை விடப் போவதில்லை என பாஜக கங்கணம் கட்டி  வருகின்றனர். இந்தி பேசும் முதலாளியிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு தமிழ் தமிழ் உணர்வு எனக் கூறிக் கொண்டு பிரமருக்கு எதிராக விஷத்தை பரப்புவதுதான் ஊடக தர்மமா என பாஜகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios