ராத்திரி 8 மணி ஆனா போதும் வெள்ளச்சாமி பாட ஆரம்பிச்சுடுவாரு என்று பட டயலாக்கை மீம்ஸாகப் போடும் அளவுக்கு காலை 10 மணி ஆனால் போதும், பத்திரிகையாளர்களைச் சந்தித்துவிடுவார் அமைச்சர் ஜெயக்குமார். 

அரசு திட்டங்களை விளக்குவது, அரசியல் விவகாரங்களைப் பேசுவது, எதிர்க்கட்சிகளுக்கு பதில் சொல்வது என அதிமுகவின் பிரச்சாகராக மாறிவிட்டார் மனிதர். இப்போது ஜெயக்குமார் புராணம் எதற்கு என்றுதானே நினைக்கிறிர்கள்? ஜெயக்குமார் தன் பெயரில் புதிதாக யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். அந்த சேனலில் தினந்தோறும் அளிக்கும் பேட்டிகள், பொதுக்கூட்டங்களில் பேசும் பேச்சுகள் மற்றும் அவரது அன்றாட அரசியல் நடவடிக்கைகளை பதிவிட்டு வருகிறார். 

செய்தித் தொலைக்காட்சிகளில் ஜெயக்குமார் பேட்டியை 30 விநாடிகள், ஒரு நிமிடம் என்ற அளவிலேயே ஒளிபரப்புவார்கள். ஆனால், ஜெயக்குமாரின் யூடியூப் சேனலில் அவரது முழு பேட்டியும் இடம் பெறுகிறது. இதற்காக ஜெயக்குமாருடன் கேமராமேன் ஒருவரும் சுற்றத் தொடங்கிவிட்டாராம்.

புதிய யூடியூப் சேனல் தொடங்கியது பற்றி அமைச்சர் ஜெயக்குமாரிடமே செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். “செலவில்லாமல் சேனல் தொடங்க நினைத்தேன். அதனால் தொடங்கப்பட்டதுதான் அந்த சேனல். 1000 ரூபாய் கட்டினால் போதும் தொடங்கிவிடலாம். எனவே நீங்களும் புதிய சேனலை  தொடங்கிக்கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார். இந்தப் பேட்டி, உங்கள் யூடியூப் சேனலில் வருமா சார்?