விஜயகாந்த் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் நிலையில், கட்சிப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.  அவர் மீண்டும் சில நாட்களில்  சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் நிர்வாக அளவில் தேமுதிகவில் பல மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

 

இதன் முதல் கட்டமாக கடந்த வாரம் தேமுதிகவின் பொருளாளராக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா நியமிக்கப்பட்டார். அவர் இது வரை எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் இருந்து வந்தார்.

அவரது மைத்துனர் எல்.கே.சுதீஷ் இளைஞரணி செயலாளராக இருந்து கட்சியை வழிநடத்தி வந்தபோதும், குடும்ப அரசியல் என்கிற சர்ச்சை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், எல்.கே.சுதீஷ் வகித்து வரும் இளைஞரணி செயலாளர் பதவியில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனை நியமிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

 

விஜயகாந்தின் நேரடி வாரிசு என்பதால் சர்ச்சைகள் எழ வாய்ப்பில்லை என்பதால் அவர் நியமிக்கப்பட உள்ளார். கட்சிப்பணிகளை அவரே நேரடியாகக் களத்தில் இறங்கிக் கவனிக்க உள்ளார் என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

ஏற்கனவே தேமுதிக ., இளைஞரணிசெயலராக, இருந்த  விஜயகாந்தின் மைத்துனர், சுதீஷ், ஓராண்டுக்கு முன் மாநில துணைச் செயலராக,நியமனம் செய்யப்பட்டார்.அதன்பின், இரண்டு பதவிகளையும், அவர் வகித்தார்.

 

இந்நிலையில் தற்போது, இளைஞரணி பதவி, சுதீஷிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக, இளைஞரணி செயலராக, முன்னாள் எம்எல்ஏ  நல்லதம்பி நியமிக்கப்பட்டுள்ளார். 'இவருக்கு, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்' என,விஜயகாந்த் கூறியுள்ளார்.

 

அதே நேரத்தில் நல்லதம்பி சில நாட்கள் இந்த பதவியில் இருப்பார் என்றும் விரைவில் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் இளைரணி செயலாளராக நியமிக்கப்படவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.