Young people should come into politics at the highest level - PMK founder Ramadoss call
அரசியலுக்கு இளைஞர்கள் அதிக அளவில் வரவேண்டும். கட்சியில் அவர்களுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. இளைஞர்களால்தான் மாற்றத்தை கொண்டுவர முடியும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட பா.ம.க. பொதுக்குழுகூட்டம் பட்டாபிராமில் நடைபெற்றது.
இதில், திருவள்ளூரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணமாக இருந்து வரும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி மத்திய நவீன சிறப்பு பேருந்து நிலையம் அமைத்திட வேண்டும்.
கொரட்டூர் அகராவரம் ஏரி மற்றும் மாதவரம் இரட்டை ஏரிகள் சுற்றுலாதலமாக அறிவிக்கப்பட்டு கட்டமைப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், பணிகளை முடிக்காமல் இருந்து வரும் பொது பணித்துறை, பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
கோயம்பேடு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா, கொல்கத்தா மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் தொலை தூர பேருந்துகளை செங்குன்றம் பகுதியில் நவீன பேருந்து நிலையம் அமைத்து இயக்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது :
பா.ம.க. மத்திய அமைச்சர்கள் திட்டங்களை கொண்டு வந்த அளவிற்கு வேற எந்த கட்சியாவது திட்டங்களை கொண்டு வந்தது உண்டா?
மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி பா.ம.க. அரசியலுக்கு இளைஞர்கள் அதிக அளவில் வரவேண்டும். கட்சியில் அவர்களுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. இளைஞர்களால்தான் மாற்றத்தை கொண்டுவர முடியும்.
அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் தமிழகத்தை சீரழித்தது போதும் என மக்கள் உணர்ந்து விட்டார்கள்.
சூரியன் அஸ்தமனம் தொடங்கி விட்டது. இரட்டை இலை உதிர்ந்து மக்கிவிட்டது. விரைவில் அரசியல் மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
