Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவை மதவாதிகளின் கூடாரமாக்கி, சந்தி சிரிக்க வச்சுட்டீங்க.. இசுலாமியர்களிடம் மன்னிப்பு கேளுங்க.. சீமான்.

இசுலாமிய மக்களின் உள்ளக்காயத்தை ஆற்றுப்படுத்த, பாஜகவின் தேசியத்தலைமை வெளிப்படையான மன்னிப்புகோரி, நாடெங்கிலும் ஏற்பட்டிருக்கிற அசாதாரண சூழலைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் வன சீமான் வலியுறுத்தியுள்ளார்.

You have made India a tent of sectarianism. Apologize to the Islamists .. Seeman.
Author
Chennai, First Published Jun 14, 2022, 1:01 PM IST

இசுலாமிய மக்களின் உள்ளக்காயத்தை ஆற்றுப்படுத்த, பாஜகவின் தேசியத்தலைமை வெளிப்படையான மன்னிப்புகோரி, நாடெங்கிலும் ஏற்பட்டிருக்கிற அசாதாரண சூழலைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் வன சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-  

பெருமகனார் நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட பாஜக நிர்வாகிகளான நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரைக் கைதுசெய்யக்கோரி நாடெங்கிலும் போராட்டம் வெடித்திருக்கும் நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு இருவர் உயிரிழந்த செய்தியானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. 9 மாநிலங்களில் போராட்டம் பற்றியெரிகிறபோது நாட்டை ஆளக்கூடிய பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கள்ளமௌனம் சாதிப்பது கடும் கண்டனத்திற்குரியது. பன்மைத்துவம் எனும் பரந்துபட்டக் கோட்பாட்டுக்குப் பெயர்போன நாட்டில் இசுலாமிய மக்களுக்கெதிராக நடத்தப்படும் அவதூறுப்பரப்புரைகளும், மதவெறிச்செயல்பாடுகள், கோர வன்முறைகளும், அரசின் இனஒதுக்கல் கொள்கைகளும் இந்தியப்பெருநாட்டுக்குப் பெரும் அவமானத்தையும், தலைகுனிவையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

You have made India a tent of sectarianism. Apologize to the Islamists .. Seeman.

பல கோடிக்கணக்கான இசுலாமிய மக்கள் தங்களது இறைத்தூதரெனப் போற்றிக்கொண்டாடி வரும் பெருமகனார் நபிகள் நாயகம் அவர்களை இழித்துரைத்த பாஜகவின் நிர்வாகிகளைக் கைதுசெய்யக்கோரி, ஒட்டுமொத்த இசுலாமியச்சமூகமும் ஒற்றைப்பெருங்குரலெடுத்துப் போராடி வரும் நிலையில், அவற்றிற்குச் செவிசாய்க்காது அவர்கள் மீது அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும் கட்டவிழ்த்துவிடுவது அரசப்பயங்கரவாதத்தின் உச்சமாகும். அரபு நாடுகளும், இசுலாமிய நாடுகளும் தங்களது கண்டனத்தைப் பதிவுசெய்து வரும் நிலையில், அந்நாடுகளில் வாழும் இந்திய நாட்டுக்குடிகளது இருப்பும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி வரும் பேராபத்து குறித்து துளியும் சிந்தித்திடாது இசுலாமிய மக்கள் மீது எதேச்சதிகாரப்போக்கை ஏவிவிடும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் செயல்பாடுகள் வெட்கக்கேடானது.

ஒன்றியத்தை ஆளும் ஆட்சியாளர் பெருமக்களே! உளச்சான்று என ஒன்று உங்களிடமிருக்கிறதா? பாபர் மசூதியை இடித்தீர்கள்! அப்பாவி அப்சல் குருவைத் தூக்கிலிட்டீர்கள்! முத்தலாக்கைக் கொண்டு வந்து மதவுரிமையில் தலையிட்டீர்கள்! நாடெங்கிலுமுள்ள மசூதிகளைக் குறிவைத்தீர்கள்! பாங்கு ஓதுவதையும் காற்று மாசுபாடெனக் கூறி, குற்றம் கூறினீர்கள்! உணவுரிமையில் தலையிட்டு, மாட்டிறைச்சி உண்ணவும் கெடுபிடி செய்தீர்கள்! இசுலாமியப்பெண்கள், ஹிஜாப் அணிவதற்கெதிராகக் கலவரம் செய்தீர்கள்! காஷ்மீரில் மாநிலத்தன்னுரிமையைப் பறித்து, மண்ணின் மக்களை அகதிகளாக்கினீர்கள்! குஜராத்தில் மூவாயிரம் இசுலாமியர்களைப் படுகொலைசெய்தீர்கள்! ஹஜ் மானியத்தை ரத்துசெய்தீர்கள்! தேசிய முகாமைச் சட்டத்தைக் கொண்டு வந்து, இசுலாமியர்களைப் பயங்கரவாதிகளெனக் கட்டமைத்து, கைதுசெய்தீர்கள்! கல்லெறிந்தார்கள் எனக்கூறி கையில்லா இசுலாமியர்களின் வீட்டையும் இடித்துத் தகர்த்தீர்கள்! 

குடியுரிமைச்சட்டத்தைக் கொண்டு வந்து அவர்களது இருப்பையே கேள்விக்குள்ளாக்கினீர்கள்! இவ்வாறாக, எல்லாவற்றையும் நீங்கள் செய்துவிட்டு, எங்கள் உடன்பிறந்தார்களான இசுலாமியச்சொந்தங்களை பிரிவினைவாதிகள் என்றும், தீவிரவாதிகள் என்றும் பழிசுமத்துகிறீர்கள்! வெட்கமாக இல்லையா? இசுலாமிய நாடுகளோடு நட்புறவு வேண்டும்; அந்நாட்டுப்பொருட்களும், பொருளாதாரமும் வேண்டும். இசுலாமிய மக்களின் வரி வேண்டும்; அவர்கள் செலுத்தும் வாக்கும் வேண்டும். ஆனால், அவர்களது உரிமையும், உணர்வும், வாழ்வும் வேண்டாமா? இது நாடா? இல்லை! சுடுகாடா? 70 ஆண்டுகால விடுதலை வரலாற்றில் பன்னாட்டுச்சமூகத்தின் முன்னே உலகரங்கில் இந்தியாவை மதவாதிகளின் கூடாரமாகக் காட்டி, சந்தி சிரிக்க வைத்ததைத் தவிர, நீங்கள் சாதித்தது என்ன நியாயமாரே?

You have made India a tent of sectarianism. Apologize to the Islamists .. Seeman.

பெருமகனார் நபிகள் நாயகம் அவர்களைக் கொச்சைப்படுத்தி, இழித்துரைத்த பாஜகவின் நிர்வாகிகளை நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் அவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமெனவும், இசுலாமிய மக்களின் உள்ளக்காயத்தை ஆற்றுப்படுத்த பாஜகவின் தேசியத்தலைமையானது வெளிப்படையாக மன்னிப்புகோரி, நாடெங்கிலும் ஏற்பட்டிருக்கிற அசாதாரண சூழலைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios