2017 க்கு முன் விற்கப்பட்ட வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயமாக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது என்று சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாஸ்டேக் கார்டு என்பது ரேடியோ அதிர்வெண் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அதனுடன் இணைக்கப்பட்ட ப்ரீபெய்ட் அல்லது சேமிப்புக் கணக்கிலிருந்து நேரடியாக கட்டணம் செலுத்தும் அடையாள அட்டை. இதை வாங்கி நாம் காரின் கண்ணாடியில் பொருத்தி கொள்ள வேண்டும். மேலும் இந்த கார்டிற்கு தேவையான பணத்தை முன்னரே செலுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். ரீசார்ஜ் செய்யப்பட்ட கார்டை காரின் கண்ணாடியில் பொருத்தினால், கார் சுங்கசாவடியில் நுழையும் இடத்தில் ஒரு மிஷின் பொருத்தப்பட்டிருக்கும். அந்த மிஷின் நம் காரின் எண்ணை விரைவில் கண்டறிந்து நமது வருகையை பதிவு செய்யும். இதன் மூலம் சுங்கசாவடியில் பணம் செலுத்துவதற்காக வாகனங்கள் வரிசைகட்டி நிறுத்துவதை தவிர்க்கலாம். இந்த நடைமுறை கடந்த ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டிசம்பர் 1, 2017 க்கு முன் விற்கப்பட்ட வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயமாக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது என்று சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பம் அடிப்படையிலான கட்டணத்தை ஊக்குவிப்பதற்காக, இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் “ விதிகளுக்கு திருத்தம் செய்யப்பட்டு, 2021 ஜனவரி 1 முதல் பழைய வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

மேலும் “டிசம்பர் 1, 2017 க்கு முன்னர் விற்கப்பட்ட பழைய வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயமாக்குவது குறித்து பங்குதாரர்களிடமிருந்து கருத்துகளையும் பரிந்துரைகளையும் பெற ஒரு வரைவு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1989 மத்திய மோட்டார் வாகன விதிகளின் படி, திருத்தப்பட்ட ஏற்பாடு நடைமுறைக்கு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

மேலும் இன்சூரன்ஸ் பெறும் போதும், ஃபாஸ்டேக் கட்டாயமாக வைத்திருப்பது உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 1, 2021 இல் நடைமுறைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய மோட்டார் வாகன விதிகள்1989 இன் படி, 2017 முதல் புதிய நான்கு சக்கர வாகனங்களை பதிவு செய்வதற்கு ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டது. மேலும் இந்த அட்டை வாகன உற்பத்தியாளர் அல்லது அவற்றின் விநியோகஸ்தர்களால் வழங்கப்பட உள்ளது.

போக்குவரத்து வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் பொருத்தப்பட்ட பின்னரே உடற்பயிற்சி சான்றிதழ் புதுப்பித்தல் செய்யப்படும். தேசிய அனுமதி வாகனங்களைப் பொறுத்தவரை, 2019 அக்டோபர் 1 முதல் ஃபாஸ்டேக்கின் பொருத்தம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.