வன்னியர் தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி அடுத்த கட்ட போராட்டத்தை பாமக அறிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அக்கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் கூறியிருப்பதாவது: 

 சமூகத்தின் அடித்தட்டில் உள்ள ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்க்காக 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்குங்கள் என்று கோரிக்கை வைத்தால் அதை நிறைவேற்றுவது தானே அரசின் முதற் கடமையாக இருக்க வேண்டும். தமிழக மக்கள் தொகையில் 25 சதவீத மக்களின் நலனை புறக்கணித்துவிட்டு யாருடைய நலனுக்காக இந்த அரசு செயல்பட வேண்டும். நியாயமான கோரிக்கைகளுக்காக 40 ஆண்டுகள் போராடியும் பயன் கிடைக்காத நிலையில், இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் போராடிக் கொண்டிருக்க முடியும். இந்த நிலை இப்படியே நீடிப்பதை அனுமதிக்க முடியாது, கோரிக்கை நிறைவேற்றப்படும் வரையில் எங்களது போராட்டம் ஓயப்போவதில்லை. 

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தொடர் போராட்டங்களின் அடுத்தகட்டமாக வரும் 30ஆம் தேதி புதன்கிழமை காலை 11:30 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள 388  ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன் மக்கள் திரள் போராட்டம் நடைபெறவிருக்கிறது. இதுவரை நடத்தப்பட்ட போராட்டங்களை விட இந்த போராட்டம் நமது முழுமையான வலிமையை காட்டும் வகையில் அமைய வேண்டும்.

அதற்காக ஒவ்வொரு ஒன்றியத்திலும் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து அவர்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும். இதற்காக ஒவ்வொரு ஒன்றியத்திலும் 50 இரு சக்கர ஊர்திகள் மற்றும் மூன்று இளைஞர்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட வேண்டும், அவர்கள் ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள கிராமங்களில் எண்ணிக்கையை பொறுத்து ஒரு நாளைக்கு 8 கிராமங்கள் முதல் 15 கிராமங்கள் வரை பயணம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்றவுடன் அந்த கிராமத்தில் உள்ள இளைஞர்களுடன் இணைந்து வீடு வீடாக சென்று வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி  நடத்தப்பட இருக்கும் போராட்டம் குறித்து துண்டறிக்கைகளை வழங்க வேண்டும். 

அதிக குடும்பங்கள் வாழும் கிராமங்களில் குழுவினர் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து மக்களை சந்தித்து நமது போராட்டம் பற்றியும் அதன் தேவை குறித்தும் விளக்க வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமின்றி அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் சேர்ந்த வன்னிய சொந்தங்கள், வன்னியர் அல்லாத சகோதர சமுதாயங்கள் உள்ளிட்ட அனைவரையும் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு திரட்ட வேண்டும். வன்னியர்களுக்கு சமூக நீதி கிடைக்க போராட்ட களத்திற்கு வரும்படி அழைப்பு விடுக்க வேண்டும்.

அப்போது கோரிக்கைகள் அடங்கிய மனுவில் கையெழுத்துக்களை பெற்றுக்கொள்ள வேண்டும். 30 ஆம் தேதி போராட்டத்திற்கு  மக்கள் ஆதரவை திரட்டுவதற்காக இந்த போராட்டம் உடனடியாக தொடங்கப்பட்டு மூன்று நாட்களில் நடத்தி முடிக்கப்பட வேண்டும். ஊர்திகளில் பயணிக்கும் இளைஞர்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் செல்ல வேண்டும், அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் மற்றும் தலைக்கவசம் அணிய வேண்டும்.

 

நமது கோரிக்கைகள் உள்ளிட்ட அனைத்தையும் விட உங்களின் பாதுகாப்பும், எதிர்காலமும் மிகவும் முக்கியம். இறுதி கட்ட போராட்டம் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன் இது போன்றதொரு பிரம்மாண்டமான போராட்டம் இதுவரை நடந்ததில்லை என்று போற்றும் அளவுக்கு 30 ஆம் தேதி மக்கள் திரள் போராட்டம் அமைவதை அனைத்து நிலை நிர்வாகிகளும் உறுதி செய்ய வேண்டும். நமது போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கு முன்னோட்டமாக நமது இளைஞர்கள் அர்த்தமுள்ள இருசக்கர வாகன ஊர்தி பரப்புரை பயணம் அமைய வேண்டும். இவ்வாறு  மருத்துவர் ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.