உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவர் சுவாதி சிங். அவர் அண்மையில், அன்சால் டெவல்ப்பர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்தற்காக லக்னோ சர்க்கிள் அதிகாரி கெனட் பீனு சிங்கிடம் கேள்வி கேட்டு மிரட்டியுள்ளார். 

இது தொடர்பான ஆடியோ ஒன்று சமூக வலைவளத்தில் வெளியாகி வைரலானது. அந்த ஆடியோவில், போலி வழக்கில் அந்த நிறுவனத்தின் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளீர்கள். 

இது பெரிய இடத்து வழக்கு மற்றும் முதலமைச்சருக்கு இது குறித்து தெரியும். இது தவறு, வழக்கை முடியுங்க. தொடர்ந்து பணியில் இருக்க வேண்டும் என விரும்பினால் என்னை அலுவலகத்தில் வந்து பார் என சுவாதி சிங் கூறுவது தெளிவாக கேட்கிறது. 

இந்த ஆடியோ விவகாரத்தை கையிலெடுத்த சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் யோகி ஆதித்யநாத் அரசை கடுமையாக விமர்சனம் செய்தன.

இந்நிலையில், ஆடியோ விவகாரம் தொடர்பாக தன்னை வந்து சந்தித்து விளக்கம் கொடுக்கும்படி அமைச்சர் சுவாதி சிங்குக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் சம்மன் அனுப்பியுள்ளார். மேலும், ஆடியோவின் உண்மை தன்மை ஆய்வு செய்து 24 மணி நேரத்தில் அறிக்கை அளிக்கும்படி அம்மாநில டி.ஜி.பி.க்கு ஆதித்யநாத் உத்தரவிட்டார்.