கர்நாடக சட்டப்பேரவையிலிருந்து 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் ராஜினாமா செய்வதாக அறிவித்ததால், குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. புதிய முதல்வராக பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா பொறுப்பேற்றுள்ளார். ஜூலை 31ம் தேதிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் வஜூவாலா எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால், நாளையே பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்க எடியூரப்பா முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் ஏற்கனவே 3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை 2023-ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர். எஞ்சிய எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை 2 நாட்களில் நடவடிக்கை எடுப்பது பற்றி அறிவிப்பேன் என்று சபாநாயகர் ரமேஷ் தெரிவித்திருந்தார். இதற்கிடையே சபாநாயகர் பதவியை விட்டு ரமேஷ்குமார் விலகாவிட்டால், அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 14 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளார். இதுவரை 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 14 பேர், மதசார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த 3 பேர், சுயேட்சை ஒருவர் என 17 பேர் தகுதி நீக்கத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

 
கர்நாடக சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர பாஜக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியான நிலையில் சபாநாயகர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்த பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால், அதற்கு முன்பாகவே இந்த நடவடிக்கையை சபாநாயகர் எடுத்துள்ளார். இனி தகுதி நீக்கத்துக்கு ஆளான எம்.எல்.ஏ.க்கள் நீதிமன்றம் மூலமே நிவாரணம் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

 
17 பேர் தகுதி நீக்கம் மூலம் கர்நாடக சட்டப்பேரவையின் பலம் 207 ஆகக் குறைந்துவிடும். தற்போதைய நிலையில் 104 உறுப்பினர்கள் பலம் உள்ள கட்சிக்கு மெஜாரிட்டி இருப்பதாகக் கருதப்படும். பாஜகவுக்கு பேரவையில் 105 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மேலும் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ. பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். எனவே நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா 106 உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றியைப் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.