Yeddyurappa to face floor test at 4 pm today confident of proving majority

கர்நாடகா சட்டப்பேரவையில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜ அரசு மீது இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ரகசிய வாக்கெடுப்பு நடத்தவும் தடை விதித்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், எடியூரப்பா அரசு பிழைக்குமா என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.

சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவளிப்பதாகத் தெரிவித்தது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற அன்றே, ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்தித்து இரு கட்சித் தலைவர்களும் இதனை உறுதிப்படுத்தினர். ஆனாலும், 104 உறுப்பினர்களைப் பெற்றுள்ள பாஜகவைத் தனிப்பெரும் கட்சி என்ற முறையில் ஆட்சியமைக்குமாறு அழைப்பு விடுத்தார் ஆளுநர்.

கர்நாடகத்தில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆளுநரின் அழைப்பின் பேரில் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். 104 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜக இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிருபிக்கவேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்து.

இதில், எடியுரப்பா மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ரகசிய வாக்கெடுப்பாக இருக்காது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக, இடைக்கால சபாநாயகரை நியமிக்க வேண்டும். ஆங்கிலோ இந்தியன் உறுப்பினர் ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக உடனடியாக நியமனம் செய்யும் ஆளுநரின் முடிவு நிறுத்தி வைக்கப்பட வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை எடியூரப்பா அரசு முக்கிய கொள்கை முடிவுகள் மேற்கொள்ளக் கூடாது’’ என்று உத்தரவிட்டனர் நீதிபதிகள். உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து 15 நாள் அவகாசம் தரப்பட்ட பாஜக நாளை மாலையே நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

இதனயடுத்து, கர்நாடக அரசியலில் அனல் பறக்க ஆரம்பித்தது, இதற்க்கு முன்பாக எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கிவிடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாக அவர்கள் ஹைதராபாத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மஜத கட்சியின் எம்எல்ஏக்கள் 3 பேரை கடத்திவிட்டனர் என்று எச் டி குமாரசாமி கூறியிருந்தார். இதேபோல, ஆரம்பத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் காணவில்லை என்று கூறியிருந்த நிலையில் அவர்கள் 78 பேரும் பத்திரமாக உள்ளனர் என்று காங்கிரஸ் தரப்பு விளக்கமளித்தது. 



கர்நாடகா ப்ரக்யாவந்தா ஜனதா கட்சி சார்பில் ஒருவரும், சுயேச்சையாக ஒருவரும் எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்பட்டனர். ராணிபென்னூர் தொகுதியில் சங்கரும், முல்பகால் தொகுதியில் நாகேஷ் தற்போது யாருக்கு ஆதரவளிப்பது என குழப்பத்தில் உள்ளார்களாம்.

ஆனால், பாஜகவோ மற்ற கட்சியில் அதிருப்தியில் உள்ள 16 எம்எல்ஏக்கள் எங்களிடம் வந்து சேருவர் என்று கூறிவருகிறது.

பாஜகவின் ஷோபா கரந்த்லாஜே கூறுகையில் எங்கள் கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கும். காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் 16 பேர் எங்களுக்கு நிச்சயம் ஆதரவளிப்பர். அதன்படி 120 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் நாங்கள் வெற்றி பெறுவோம் என்கிறார். ஆனால் பாஜகவுக்கு இருப்பதோ 104 எம்எல்ஏக்கள்தான். இதனிடையே காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளைச் சேர்ந்த 20 லிங்காயத்து சமூக எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவளிப்பர் என்று எடியுரப்பா நம்பிக்கையில் உள்ளார். இதனால் பாஜகவின் பலம் 104 -ஆகவே இருக்குமா அல்லது 120- எம்.எல்.ஏக்களின் ஆதரவைப் பெற்று பெரும்பான்மையை நிருபிப்பாரா என இன்று தெரிந்துவிடும்.