yeddyurappa and kumaraswamy are very confident

இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், கர்நாடக அரசியல் களத்தில் நொடிக்கு நொடி அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதற்கிடையே, எடியூரப்பாவும் பாஜகவும் பெரும்பான்மை நிரூபிக்கப்படும் என ஒருபுறம் பேசிவருகின்றனர். மறுபுறம், கண்டிப்பாக பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என குமாரசாமி பேசிவருகிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கர்நாடக அரசியல் களம் உச்சகட்ட விறுவிறுப்பை எட்டியுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்காக தற்காலிக சபாநாயகராக போபையா நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், போபையாவே தற்காலிக சபாநாயகராக இருந்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தலாம் எனவும் நம்பிக்கை வாக்கெடுப்பை தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யலாம் எனவும் உத்தரவிட்டது.

இதற்கிடையே, கர்நாடக எம்.எல்.ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் போபையா, பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்க இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வரவில்லை. 

இப்படி பரபரப்பான அரசியல் சூழலில், செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, மாலை 5 மணி வரை பொறுத்திருங்கள்; அதன்பிறகு கொண்டாடலாம் என தொண்டர்களுக்கு செய்தி கொடுத்தார். கண்டிப்பாக பெரும்பான்மையை நிரூபித்துவிடுவோம். அதன்பிறகு கொண்டாடலாம் என்ற தொனியில் இருந்தது எடியூரப்பா பேசியது.

அதேபோல், குமாரசாமி பேசுகையில், என் வாழ்க்கையில் இன்றைய நாள் ஒன்றும் அவ்வளவு முக்கியமான நாளெல்லாம் கிடையாது. ஆனால் எதிர்காலத்தில் முக்கியமான நாட்கள் வரும். இன்று மாலை 4 மணி வரை எங்கள் எம்.எல்.ஏக்களை வேட்டையாட பாஜகவினர் முயற்சிப்பர். ஆனால் எங்கள் எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையுடன் உள்ளனர். எந்த பக்கமும் எம்.எல்.ஏக்கள் செல்லவில்லை என குமாரசாமி தெரிவித்தார்.

இருதரப்புமே நம்பிக்கையுடன் இருக்கும் நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் என்ன நடக்கும்? என்பது தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.