திமுக, அதிமுகவுக்கு மாற்றாக புதிய அரசியல் உருவாகியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 2031-ல் தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வருவதே இலக்கு என்றும், மத்திய அமைச்சர் பதவியில் தனக்கு விருப்பமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தொகுதி மறுவரையறை மற்றும் காவிரி விவகாரம் குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாட்டில் 2031-ல் ஆட்சி மாற்றம் உறுதி.? பாமக தலைவர் அன்புமணி சொன்ன முக்கிய தகவல்

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக புதிய அரசியல்

தமிழ்நாட்டில் சுமார் 60 ஆண்டுகளாக திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்திருப்பது அரசியலில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழக மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த மாற்றம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பாமக போன்ற கட்சிகளுக்கும் புதிய நம்பிக்கை உருவாகியுள்ளதாகவும் கூறினார்.

 2031-ல் பாமக ஆட்சி

தமிழ்நாட்டில் 2031-ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் தீவிரமாக களப்பணி செய்து வருவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். தமிழக மக்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்பதே தங்களின் முக்கிய இலக்கு என்றும், மக்கள் தங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார். மத்திய அமைச்சர் பதவியில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், தங்களின் முழு கவனமும் தமிழ்நாட்டின் அரசியலை நோக்கியே இருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

சாதிக் கட்சி என்ற விமர்சனத்துக்கு பதில்

பாமகவை சாதிக் கட்சி என முத்திரை குத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அன்புமணி கூறினார். தங்கள் கட்சி சமூக நீதிக்காக தொடர்ந்து போராடி வருவதாகவும், பல்வேறு சமூகங்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளை பெற்றுத் தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரச்சினைகளை விவரங்களுடன் சட்டப்பேரவையில் தொடர்ந்து எடுத்துரைத்து வருவதாகவும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களில் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நியாயமான தொகுதி மறுவரையறை தேவை

தொகுதி மறுவரையறை குறித்து பேசிய அன்புமணி, மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு நியாயமான முறையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்றார். தமிழ்நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப தற்போது உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் அதிகரித்து 59 தொகுதிகளாகும் வாய்ப்பு இருப்பதாகவும், இதன் மூலம் அதிகமான பெண் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்கு செல்லும் சூழல் உருவாகும் என்றும் அவர் கூறினார்.

மத்திய அமைச்சர் பதவி வேண்டாம்

முன்னாள் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது 108 ஆம்புலன்ஸ் திட்டம், தேசிய ஊரக சுகாதார இயக்கம், பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அன்புமணி நினைவுகூர்ந்தார். இருப்பினும், மீண்டும் மத்திய அமைச்சர் பதவி பெறுவது தமது இலக்கு அல்ல என்றும், 2031-ல் தமிழ்நாட்டில் பாமக ஆட்சியை அமைப்பதே முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

காவிரியை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்

காவிரி நீரை அரசியலாக மாற்றி இரண்டு மாநிலத்தையும் எதிரிகளாக்க வேண்டாம் என அன்புமணி தெரிவித்தார். கர்நாடகத்தில் உள்ள தலைவர்களிடம் கொள்கைகளைத் தாண்டி தனிப்பட்ட முறையில் நண்பர்களாக இருக்கிறோம். ஆனால் காவிரி நீர் விவகாரத்தில் அரசியல் செய்து அந்த நட்பை பிளவுபடுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.