இலக்கியப்பணிகளுக்காகவும், சிறந்த ஆவணப்படங்களைத் தயாரித்ததற்காகவும் தனக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ  விருதை ஏற்றுக்கொள்ள எழுத்தாளர் கீதா மேத்தா மறுத்துள்ளார். 

நாட்டின் 70-ஆவது குடியரசு தினம் இன்று சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு 2019-ஆம் ஆண்டுக்கானபத்ம விருதுகளை பெறும்பேர் அடங்கிய பட்டியலைமத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. பத்ம விபூஷண் விருதுகள் 4 பேருக்கும், பத்ம பூஷண் விருதுகள் 14 பேருக்கும், பத்மஸ்ரீ விருதுகள் 94 பேருக்குமாக மொத்தம் 112 பேர் இவ்விருதுகளுக்கு  தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், எழுத்தாளரும், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் தங்கையுமான கீதா மேதா, தனக்கு வழங்கப்பட்ட பத்ம விருதுக்கு அரசியல் சாயம் பூசப்பட வாய்ப்புள்ளதால் அதை  நிராகரிப்பதாக தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

பத்மஸ்ரீ விருது பெறும் அளவு தகுதியுடைவராக மத்திய அரசு என்னை கருதியதற்காக நான் பெருமைப்படுகிறேன். இருப்பினும் தற்போது தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் எனக்கு இந்த விருது வழங்கப்படுவது தவறாக அமைந்துவிடும். எனவே நான் இந்த விருதை நிராகரிக்கிறேன். இது எனக்கும், மத்திய அரசுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. இதற்காக நான் வருத்துகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

‘கர்ம கோலா’,’ராஜ்’, ‘எ ரிவர் சூத்ர’,பெர்த் டு ரிபெர்த்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ள கீதா மேத்தா 14 ஆவணப்படங்களை தயாரித்து இயக்கியும் உள்ளார்.