காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தி போராட்டங்கள் வலுத்துவருகின்றன. உரிமைக்காக ஒன்றிணைந்துள்ள தமிழர்களை பிளவுபடுத்தும் வகையிலான ஐபிஎல் போட்டிகள், சென்னையில் நடைபெறக்கூடாது என வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டங்களால், சென்னையில் நடைபெற இருந்த ஏனைய போட்டிகள் புனேவிற்கு மாற்றப்பட்டுள்ளன.

அதேபோல மேலாண்மை வாரியத்தை அமைக்காத பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை விமான நிலையம், கிண்டி, ஆலந்தூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்பட்டது.

சென்னை கிண்டியில், திமுக சார்பில் ராட்சத கருப்பு பலூன் பறக்கவிடப்பட்டது. சென்னை வேளச்சேரியில் வைகோ தலைமையில் பிரதமருக்கு எதிராக கருப்பு பலூன் பறக்கவிட்டு போராட்டம் நடைபெற்றது.

பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் கருப்பு கொடி காட்டுவது மட்டுமல்லாமல், சிறிய கருப்பு பலூன் முதல் ராட்சத கருப்பு பலூன் வரை பறக்கவிடுவது என தமிழகத்தில் பிரதமரின் சென்னை வருகைக்கு எதிர்ப்புகள் வலுத்தன.

#GoBackModi - திரும்பி போங்க மோடி என்ற இந்த ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங்கில் உள்ளது. தேசிய அளவில் டிரெண்டிங்கில் இருந்த இந்த ஹேஷ்டேக், உலகளவில் முதலிடம் பிடித்துள்ளது. 

களத்தில் இறங்கி மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிராக அதிகமான கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன. பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துகள், மீம்ஸ்கள் ஆகியவை அதிகளவில் டுவிட்டரில் பதிவிடப்பட்டதால், உலகளவில் பிரதமர் மோடிக்கு எதிரான ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது.

இதன்மூலம், பிரதமர் மீதான தமிழகத்தின் எதிர்ப்பு, உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.