தமிழகத்தில் ரூ. 318 கோடியில் 10 ஆயிரம் தடுப்பணைகள் புதிதாக கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அவர் சொன்னது படி கட்டிவிட்டால் அது உலக சாதனைதான்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 17ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக மக்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, சட்டப்பேரவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 

தண்ணீர் பஞ்சம் தமிழகத்தில் தலைவிரித்தாடும் நிலையில், ’’தண்ணீரை சேமித்து பாசனத்துக்கு பயன்படுத்துவதற்காக தமிழகத்தில் ரூ.318 கோடியில் 10 ஆயிரம் தடுப்பணைகள் புதிதாக கட்டப்படும். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். தமிழகத்தில் எதிர்வரும் காலங்களில் தண்ணீர் பிரச்னையை சரிசெய்யும் பொருட்டு தடுப்பணைகள் காட்டப்படுகிறது’’ என்று தெரிவித்தார். 

காமராஜர் ஆட்சி காலத்தில் 7 அணைகள் கட்டப்பட்டது. 1963-க்கு பிறகு தமிழகத்தில் 70-க்கும் மேற்பட்ட அணைகள் கட்டப்பட்டள்ளது. அவற்றில் ஒரு சில அணைகள் மட்டுமே பெரிய அளவில் கட்டப்பட்டவை. மற்றவை அனைத்தும் சிறிய அளவிலான தடுப்பணைகளே. 1965-ல் கள்ளக்குறிச்சி கோமுகிண்டி நீர்பாசன அணை, 1967-ல் பெரியகுளம் மஞ்சளாறு அணை, உடுமலைப்பேட்டை திருமூர்த்தி அணை, 1968-ல் ஈரோடு உப்பாறு (காவிரி), 1970-ல் கள்ளக்குறிச்சி மணிமுக்தானாதி அணை (வெள்ள தடுப்பு& நீர் பாசனம்), 2001-ல் கொடைக்கானல் சோத்துப்பாறை அணை போன்ற பல அணைகள் நீர் பாசனத்திற்கும், மின் திட்டத்திற்கும் பயன்படும் வகையில் கட்டப்பட்டுள்ளன.

2011 ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் மாம்பழத்துறையாறு ஆற்றின் பகுதியில் கட்டப்பட்ட அணைதான் தமிழ்நாட்டில் இறுதியாக கட்டப்பட்ட அணை. கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தில் தடுப்பணைகள் ஏதும் கட்டப்படவில்லை.

இந்நிலையில் 10 ஆயிரம் அணைகள் கட்டப்பட உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 10 ஆயிரம் அணைகள் என்பது நினைத்தே பார்க்க முடியாத விஷயம். இப்படி ஒரு அறிவிப்பை கமாராஜர், எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா வரை யாரும் அறிவித்ததில்லை.  அப்படியே இருந்தாலும் அவர் அறிவித்துள்ளது படி 318 கோடி ரூபாயில் 10 ஆயிரம் அணைகள் எப்படி கட்ட முடியும் என்கிற சந்தேகமும் எழுகிறது. காரணம் இந்த தொகைப்படி கணக்கிட்டால் ஒரு தடுப்பணை 3 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயில் மட்டுமே கட்டப்படும். அதன்படி 10 ஆயிரம் அணைகள் கட்டி விட்டால் அது உலக சாதனை தான்.!