கீழடியில் கொந்தகை கிராமத்தில் 12.21 கோடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில் பங்கேற்றுப்பேசிய அவர், கீழடி அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. எனத் தெரிவித்தார். முன்னதாக, மதுரை உலக தமிழ் சங்க வளாகத்தில் அமைக்கப்பட்ட கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

 

கீழடியில் கடந்த 2017 முதல் நடைபெற்ற 4 மற்றும் 5ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொருட்கள் இக்கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் சுடுமண் சிற்பங்கள், மண் பானைகள், ஆயுதங்கள், ஓடுகள், சுதை சிற்பங்கள், சூது பவள மணிகள், விளையாட்டு பொருட்கள், உறை கிணறு, செங்கல் கட்டுமானங்கள், நீர் நிர்வாக வடிகால் அமைப்பு உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளது. 

கீழடி அகழ்வாராய்ச்சி தளத்தை நேரில் பார்ப்பது போன்ற விர்ச்சுவல் ரியாலிட்டியுடன் கூடிய டிஜிட்டல் அருங்காட்சியகம் பார்வையாளர்கள் கவனத்தை கவரும் வகையில் இருக்கிறது. கீழடியில் நிரந்தர அருங்காட்சியகம் கட்டும் வரை இக்கண்காட்சி செயல்படும் எனவும அறிவிக்கப்பட்டுள்ளது.