Asianet News TamilAsianet News Tamil

அன்று அவ்வளவு வக்கனியா பேசினீங்களே! நீங்கள் வெளியிட்ட அறிக்கையை நீங்களே படித்து பாருங்கள்!ஸ்டாலினை விளாசிய EPS

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களைப் போல் மத்திய அரசுக்கு தலையாட்டாமல் தமிழகத்தில் இந்தச் சட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று, எனது தலைமையிலான அம்மாவின் அரசுக்கு கெடு விதித்தார். 

Working Hours issue..Edappadi Palanisamy condemns DMK government
Author
First Published Apr 22, 2023, 3:35 PM IST | Last Updated Apr 22, 2023, 3:39 PM IST

12 மணி நேர தொழிலாளர் சட்டத்திருத்த மசோதாவை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தனி மனித வாழ்க்கையிலும், அரசியலிலும் இரட்டை வேடம் போடுவதையே வாடிக்கையாகக் கொண்ட இன்றைய ஆட்சியாளர்கள், தமிழக தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் வேலையை கனகச்சிதமாக செய்துள்ளனர்.

Working Hours issue..Edappadi Palanisamy condemns DMK government

 8 மணி நேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் என்பதை நூறாண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் தங்களது அடிப்படை உரிமையாக கடைபிடித்து வருகிறார்கள். கடந்த 2020-ஆம் ஆண்டில் மத்திய அரசு தொழிலாளர் வேலை சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தது. வாரத்தில் 4 நாட்கள் குறைந்தபட்சம் 48 மணி நேர வேலை, 3 நாட்கள் விடுமுறை என்பது அந்தச் சட்டத்தின் ஷரத்து.

தகவல் தொழில்நுட்ப துறைகளிலெல்லாம் 8 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்குவதாலும், உரிய சம்பளம் தராமல் இருப்பதாலும் பணியாளர்களின் உரிமையை நிலைநாட்ட இந்தச் சட்டம் கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு மாநில அரசும் அவர்களின் விருப்பத்திற்கேற்ப இந்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது. அப்போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தச் சட்டத்தை எதிர்த்து வக்கணை பேசினார். 

Working Hours issue..Edappadi Palanisamy condemns DMK government

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களைப் போல் மத்திய அரசுக்கு தலையாட்டாமல் தமிழகத்தில் இந்தச் சட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று, எனது தலைமையிலான அம்மாவின் அரசுக்கு கெடு விதித்தார். அன்று மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கையை இன்று அவரே படித்துப் பார்க்க வேண்டும்.

தமிழக மக்களின் நலனுக்காகவும், தமிழக மக்களின் தேவையை பூர்த்தி செய்யவும், அம்மாவின் அரசால் மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதப்படும் போதெல்லாம் எங்களைப் பார்த்து கேலி பேசிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய விடியா அரசின் முதலமைச்சர், கொத்தடிமையாக மாறி 21.4.2023 அன்று தமிழக தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் விதமாக, 12 மணி நேர கட்டாய வேலை திருத்தச் சட்டத்தை தமிழக சட்டமன்றத்தில் ஒருதலைபட்சமாக நிறைவேற்றியதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். விடியா திமுக அரசு செய்யும் அனைத்து செயல்களுக்கும் தலையாட்டும் அதன் கூட்டணிக் கட்சிகளே, இந்த சட்டத்தை எதிர்த்துப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருப்பது, இந்த அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

* நீட் பிரச்சனையா? மத்திய அரசை கைகாட்டுவது

* பெட்ரோல், டீசல் விலை உயர்வா? தன்பொறுப்பை தட்டிக் கழித்து மத்திய அரசை கைகாட்டுவது

* மின் கட்டண உயர்வா? மத்திய அரசை துணைக்கு அழைப்பது

* வீட்டு வரி, சொத்து வரி உயர்வா? மத்திய அரசு உத்தரவிட்டதால் செய்கிறோம் என்று சொல்வது

* தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள நில எடுப்பு செய்யும்போது, எதிர்க்கட்சியாக இருக்கும் போது எதிர்ப்பதும்; தற்போது ஆளும் கட்சியானவுடன், நிலங்களை வலுக்கட்டாயமாக பறிப்பது

* அதேபோல், நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத் திட்டத்திற்கு மக்களின் விளை நிலங்களை வலுக்கட்டாயமாகப் பறித்து நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திடம் ஒப்படைப்பது என்று அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துள்ள இந்த அரசுக்கு, அதிமுகவைப் பற்றியோ, பத்தாண்டு கால தன்னலமற்ற எங்களின் மக்கள் சேவையைப் பற்றியோ குறை கூற எந்த அருகதையும் கிடையாது.

Working Hours issue..Edappadi Palanisamy condemns DMK government

அம்மாவின் அரசு ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது, தமிழக மக்களுக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் அனுமதித்ததில்லை. ஆனால், திராவிட மாடல் திமுக அரசு மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவதை கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி, அதை உண்மையாக்கிவிடலாம் என்ற தத்துவத்தைக் கடைபிடிக்கும், இந்த விடியா அரசின் முதலமைச்சர் தன்னிலை உணர்ந்து மக்கள் விரோதச் செயல்பாடுகளை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தொழிலாளர் விரோத சட்டத்தை உடனடியாக இந்த அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், தமிழக தொழிலாளர்களின் நலனைக் காக்க அதிமுக எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று எச்சரிக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios