Women who attacked Dashwanth

சிறுமி ஹாசினி கொலை வழக்கில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தஷ்வந்த் மீது, பெண்கள் சராமரியாக தாக்குதல் நடத்தினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட தஷ்வந்த், சென்னை மாங்காட்டை அடுத்த குன்றத்தூரில், குடும்பத்தினருடன் வசித்து வந்தான். எப்போதும் குரூர சிந்தனையுடன் இருந்த அவன், பெற்றெடுத்த தனது தாயை கொன்றுவிட்டு நகை மற்றும் பணத்துடன், மும்பைக்‍கு தப்பிச் சென்றான்.

தமிழக காவல்துறையினர் மும்பை சென்று இந்த கொலைகாரனை கைது செய்தனர். இதையடுத்து சென்னை கொண்டு வரப்பட்ட அவனை, குன்றத்தூர் காவல்துறையினர், 3 நாள் போலீஸ் காவலில் எடுத்தனர். இதனையடுத்து குன்றத்தூர் காவல்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட தஷ்வந்த்திடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையின் மூலம் மும்பைக்‍கு தப்பிச்செல்ல அவன் பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தாயை கொன்றதுபோல் தனது தந்தையையும் கொலை செய்ய திட்டமிட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்தான்.

இந்த நிலையில், சிறுமி ஹாசினி கொலை வழக்கில், செங்கல்பட்டு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. இதனை அடுத்து, சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த்தை, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர் படுத்தினர். நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த மாதர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள், திடீரென தஷ்வந்த்தை தாக்கினர். செருப்பு உள்ளிட்டவைகளால் தஷ்வந்த்தை தாக்கினர். இதையடுத்து பாதுகாப்பில் இருந்த போலீசார் தஷ்வந்த்தை மீட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ஹாசினி கொலை வழக்கில், தஷ்வந்த் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயகுமார், வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, தனது வழக்கில் தானே வாதாடுவதாக நீதிபதியிடம் தஷ்வந்த் தெரிவித்தார். இதையடுத்து, இலவச சட்ட ஆலோசனை மையத்தை நாடுமாறு தஷ்வந்துக்கு, நீதிபதி அறிவுறுத்தினார்.