பாலியல் பலாத்காரம் மற்றும் கடத்தல் என, பா.ஜனதாவை சேர்ந்த 51 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக வழக்குகள் உள்ளது என்றும், மற்ற கட்சிகளைவிட பா.ஜனதாவில்தான் அதிக வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த 48 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளது கண்டறியப்பட்டது.

பதிவு செய்யப்பட்ட கட்சி வாரியாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பாரதீய ஜனதாவே முதலிடத்தில் உள்ளது. அடுத்தப்படியாக சிவசேனாவும் (7 உறுப்பினர்கள்), திரிணாமுல் காங்கிரசும் (6 உறுப்பினர்கள்) உள்ளது.

மாநில வாரியாக மராட்டியம் 12 உறுப்பினர்களுடன் முதலிடத்தில் உள்ளது, அடுத்தபடியாக மேற்கு வங்காளம் 11 உறுப்பினர்களையும், ஒடிசா 6 உறுப்பினர்களையும் கொண்டு உள்ளது என தெரியவந்து உள்ளது.

பெண்களை தாக்குதல், கடத்துதல், கடத்தி திருமணம் செய்ய வலியுறுத்துதல், பாலியல் பலாத்காரம், பெண்ணின் கணவர் மற்றும் அவருடைய உறவினர்களை துன்புறுத்துதல், பாலியல் தொழிலுக்காக சிறுமிகளை வாங்குதல் உள்ளிட்ட வழக்குகள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக உள்ளது என்றும் ஆய்வில் தெரியவந்து உள்ளது.

4,896 பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களில் 4,852 உறுப்பினர்களின் தேர்தல் ஆணைய பிரமாண பத்திரங்கள் (அபிடவிட்) பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 4,120 ஆகும். இவர்களில் 4,078 எம்.எல்.ஏ.க்களின் தேர்தல் ஆணைய பிரமாண பத்திரங்கள் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 1,581 (33 சதவிதம்) எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் உள்ளது.

51 உறுப்பினர்கள் தங்களுக்கு எதிராக பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளதாக பிரமாண பத்திரத்தில் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள் என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.