அறிமுகம் இல்லாத பெண்ணின் கற்பையும், மானத்தையும் காப்பாற்ற தனது இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன் யாகேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவியை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மப்பேடு என்கிற பகுதியில் டிசம்பர் 26-ம் மாலை சுமார் 6 மணி அளவில், மாரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயது பெண் நரசிங்கபுரம் செல்வதற்கு சாலையில் காத்திருந்தார். அந்த வழியாக ஷேர் ஆட்டோ ஒன்றில் அவர் ஏறினார். அவருடன் சில பயணிகளும் ஏறிக்கொண்டனர். ஏனைய பயணிகள் வழியில் இறங்கிவிட்ட நிலையில், அந்தப் பெண் மட்டும் வாகனத்தில் இருந்தார். அந்த வாகனம் நரசிங்கபுரம் செல்லாமல் கொண்டஞ்சேரி என்கிற பகுதியிலிருந்து கடம்பத்தூர் செல்லும் சாலையில் வேகமாக விரைந்தது. ஏதோ தவறு நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட அந்தப் பெண், வாகனத்தை நிறுத்துமாறு ஓட்டுநரை வலியுறுத்தினார். அதை அவர் பொருட்படுத்தாமல் விரைந்தபோது, அசம்பாவிதம் நடக்க இருப்பதை உணர்ந்து கொண்ட அந்தப் பெண், தன்னைக் காப்பாற்றும்படி கூச்சலிடத் தொடங்கினார். 

ஆட்டோவில் பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு அந்தப்பகுதியில் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த கொண்டஞ்சேரியை 22 வயது யாகேஷ் என்பவரும், அவரது நண்பர்கள் எஸ்தர் பிரேம்குமார், வினீத், துரைராஜ், சார்லி பிராங்க்ளின் ஆகியோரும் சாலையோரமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஷேர் ஆட்டோவிலிருந்து உதவி கேட்டு அந்தப் பெண் எழுப்பிய அலறலால் திடுக்கிட்ட அந்த இளைஞர்கள், உடனடியாக அந்தப் பெண்ணுக்கு உதவ தங்களது இரு சக்கர வாகனங்களில் அந்த ஷேர் ஆட்டோவை துரத்தத் தொடங்கினர். 

தனது வாகனத்தை சில இளைஞர்கள் துரத்திக் கொண்டு வருவதைப் பார்த்து பயந்த ஆட்டோ ஓட்டுநர், மேலும் வேகமாக விரைய முற்பட்டார். ஓர் இடத்தில் எதிரில் வந்த வாகனத்திற்காக சற்று மெதுவாகச் சென்றபோது அந்தப் பெண் வாகனத்திலிருந்து சாலையில் குதித்துவிட்டார். அந்த ஷேர் ஆட்டோ நிற்காமல் வேகமாக சென்றது. இதற்குள் 3 கி.மீ. தூரம் அந்த ஷேர் ஆட்டோ பயணித்திருந்தது. 

இதனையடுத்து, தனது நண்பர்களை அந்தப் பெண்ணை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறிவிட்டு யாகேஷும், சார்லி பிராங்க்ளினும் அந்த ஷேர் ஆட்டோவை துரத்திச் சென்றனர். அந்த ஷேர் ஆட்டோவைக் கடந்து சென்று வாகனத்தைத் தடுத்து நிறுத்தினர். பிடிபடுவோம் என்று தெரிந்ததும் அந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர், யாகேஷ் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதித் தள்ளிவிட்டு விரைந்துவிட்டார். அதனால் படுகாயமடைந்த யாகேஷ் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்கட்டார். ஆனால்,  டிசம்பர் 27-ம் தேதியன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, உயிரிழந்த யாகேஷின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவியும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பிராங்க்ளின் என்பவருக்கு 2 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்த எஸ்தர் பிரேம்குமார், வினித் மற்றும் துரைராஜ் ஆகியோருக்கு தலா 25,000 ரூபாயும் நிதி வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இளைஞரின் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், அவரின் மறைவு, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியதுபோல, சரித்திரமாகப் போற்றப்படுகிறது.