போக்குவரத்துக்கு ஆய்வாளரை ஆபாசமாக திட்டிய திரைப்பட  இயக்குனர் விஷ்ணுவர்தனின், பெண் உதவி இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியை சேர்ந்த காமினி (26), இவர் திரைப்பட இயக்குனர் விஷ்ணுவர்தனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவரின் நண்பன் சேசு பிரதாப் (26) இருவரும் ஈ.சி.ஆர் பகுதியில் உள்ள தங்களது நண்பர் வீட்டிற்கு நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுவிட்டு இரவு காரில் வீடு திரும்பியுள்ளனர். 

கார் வேகமாக வந்ததை பார்த்த திருவான்மியூர் போக்குவரத்து ஆய்வாளர் மாரியப்பன், காரை நிறுத்த சொல்லி விசாரணையில் ஈடுபட்டார். விசாரணையில் காரில் பயணித்த நால்வரும் குடித்திருந்தது தெரிய வந்தது. அப்போது காரில் இருந்து இறங்கிய உதவி இயக்குநர் காமினி, ஆய்வாளர் மாரியப்பனுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். தொடர்ந்து தகாத வார்த்தைகளால் போக்குவரத்து ஆய்வாளரை திட்டி தீர்த்தார். இதுகுறித்து போக்குவரத்து ஆய்வாளர் மாரியப்பன், திருவான்மியூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின்படி, திருவான்மியூர் சட்டம் ஒழுங்கு போலீசார் காமினி மற்றும் சேசு பிரதாப் ஆகியோர் மீது அசிங்கமாக பேசுவது (294B) மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் (353) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். போதை தெளிந்தவுடன் இருவரையும் இன்று காலை காவல் நிலையம் வர வழைத்த போலீசார், இருவரையும் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும், திருவான்மியூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் அவர்கள் மீது, வாகனத்தை வேகமாக ஓட்டுவது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.