மக்கள் அனைவரும் முகக் கவசத்தை உயிர்க் கவசம் என எடுத்துக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சென்னையில் கடந்த 15 நாட்களாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நகர நிர்வாக அலுவலகத்தில் கோடம்பாக்கம், அண்ணாநகர், தேனாம்பேட்டை ஆகிய மண்டலத்தின் முக்கிய அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆலோசனையில் நடத்தினார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். 

கூட்டத்தில் பேசிய அமைச்சர் காமராஜ், சென்னையில் தற்போது அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார். அத்துடன் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சி முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். மேலும், நோய் தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், வெகுவிரைவில் நோய் கட்டுக்குள் வரும் எனவும் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, முகக்கவசம் அணியாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார். அத்துடன் முகக்கவசம் அணியாதவர்கள் மீது காவல்துறையை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மக்கள் அனைவரும் முகக் கவசத்தை உயிர்க் கவசம் என எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.