அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜெயித்துவிட்டால், அடுத் 50 ஆண்டுகளுக்கு எங்களை யாரும் அசைத்துக்கொள்ள முடியாது என்று பாஜக தேசிய செயற்குழுக்கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பிரதமர் மோடி, கட்சித்தலைவர் அமித் ஷா, எல்கே அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட பலவரும், கட்சியின் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள் என வந்திருந்தனர்.

இந்த கூட்டத்தின் நிறைவுநாளான நேற்று பிரதமர் மோடியும், கட்சியின் தலைவர் அமித் ஷாவும் உரையாற்றினார்கள், பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

 

இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் அமித் ஷா பேசுகையில், “ வரும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் அவ்வாறு பெற்றுவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு எங்களை யாரும் ஆட்சியில் இருந்து அகற்ற முடியாது. பிரதமர் மோடியின் கடினமான உழைப்பால், வரும் தேர்தலில் நமது கட்சி அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்.

மத்திய அரசும், பல்வேறு மாநிலங்களில் ஆளும் பாஜகவும் மக்களுக்கு நல்லவிதமான திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறோம். 

காங்கிரஸ் கட்சி கடந்த 1947-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்து தொடர்ந்து 20 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. அதேபோன்ற காலம் இப்போது பாஜகவுக்கு வரப்போகிறது. குஜராத்தில் தோல்வி அடையாத பாஜக இருப்பதுபோல், மத்தியிலும் ஆட்சியை பறிகொடுக்காத பாஜக உருவாகும்”என்றார்.