சென்னையில் குடிபோதையில் முக்குலத்தோர் புலிப்படை இளைஞரணி செயலாளர் அஜய்க்கும் மற்றொரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில், பிரபல நட்சத்திர விடுதியின் பார் சூறையாடப்பட்டதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூரில் உள்ள நட்சத்திர மதுபான விடுதியில் குடிபோதையில் ஏற்பட்ட வாய்த்தகராறு, அடிதடியாக மாறியதால் இரு தரப்பினரும் அங்கிருந்த பொருட்களை எடுத்து மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 

நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக இருப்பவர் அஜய். கலைவேந்தன் என்ற படத்தில் நடிகை சனம் ஷெட்டியுடன் நடித்துள்ள அஜய், தொடர்ந்து கருணாஸ் உடன் இயங்கி வருகிறார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை எழும்பூரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் உள்ள பாருக்கு அஜய் தனது நண்பர்கள் மற்றும் சில பெண் தோழிகளுடன் சென்றுள்ளார்.

அப்போது, அஜய் அழைத்துச் சென்ற பெண் தோழிகளில் ஒருவருடன் மற்றொரு தரப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நெருக்கமாக இருந்துள்ளார். இதைப் பார்த்த அஜய், தான் அழைத்து வந்த பெண்ணுடன் நீ எப்படி பேசலாம் எனக் கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், அந்த இளைஞரை நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து தாக்கப்பட்ட இளைஞர், தனது நண்பர்களை அழைத்து வந்து அஜய்-யை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மறுநாள் அந்த பாருக்கு ஆட்களுடன் வந்த அஜய், சம்பந்தப்பட்ட இளைஞர் வராததால், பாரில் இருந்த பொருட்களை அடித்து சூறையாடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அஜய் மீது பார் நிர்வாகம் புகார் அளித்துள்ள நிலையில், தன்னை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, அஜயும் போலீசில் புகார் அளித்துள்ளார். இருதரப்பு புகார்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதோடு, சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.