தொழுகைக்கு  சென்ற மதுரையைச் சேர்ந்த பிஜேபியின் சிறுபான்மை அணியின்  மாவட்ட தலைவர் ஜாபர் ஷரீப் சக இஸ்லாமியர்களால் தாக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு பாஜகவை சேர்ந்த முஹம்மது அதாவுல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். 

தொழுகைக்கு சென்ற மதுரையைச் சேர்ந்த பிஜேபியின் சிறுபான்மை அணியின் மாவட்ட தலைவர் ஜாபர் ஷரீப் சக இஸ்லாமியர்களால் தாக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு பாஜகவை சேர்ந்த முஹம்மது அதாவுல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர் ஒருவர் பாஜகவில் இணைந்தால் அவரை தாக்குவீர்களா இது என்ன நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்தது முதல் அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான திட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.வேளாண் விவசாய சட்டம், நீட் தேர்வு, அக்னிபத் போன்ற திட்டங்கள் மக்களால் எதிர்க்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மதரீதியான தாக்குதலில் பாஜக ஈடுபட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டும் அக்கட்சிக்கு எதிராக உள்ளது. இஸ்லாமிய சிறுபான்மையினரை குறிவைத்து பாஜக செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டும் பாஜகவுக்கு எதிராக இருந்து வருகிறது. மாட்டிறைச்சிக்கு தடை போன்றவற்றால் இஸ்லாமியர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்திய குடியுரிமை சட்டம் போன்ற பல்வேறு சட்டங்கள் இசுலாமியர்களுக்கு எதிராக இருந்து வருகிறது. இந்நிலையில் இஸ்லாமியர்கள் பலர் பாஜகவில் இணைந்து பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் நிலையும் இருந்து வருகிறது. வேலூர் இப்ராஹிம், பாத்திமா, முகமது அதாவுல்லா போன்றோர் பாஜகவில் இணைந்து மத்திய அரசின் திட்டங்களை சிறுபான்மையின மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தங்களைப் போல இன்னும் ஏராளமான இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு அணிவகுக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்த வரிசையில் பாஜகவின் சேர்ந்து பணியாற்றி வரும் பாஜக சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட தலைவர் ஜாபர் ஷெரீப் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதுரையில் உள்ள மசூதி ஒன்றிற்கு தொழுகைக்கு சென்ற போது சக இஸ்லாமியர்களால் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஜாபர் ஷெரீப் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாஜகவைச் சேர்ந்த முகமது அதாவுல்லாஹ் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, அதில் பாஜகவில் சேர்ந்தால் தாக்குவீர்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசிய விவரம் பின்வருமாறு:- வெள்ளிக்கிழமை அதுவுமாக தொழுகைக்கு வந்த இடத்தில் 40 ,50 பேர் சேர்ந்து ஒருவரை தாக்கியிருக்கிறார்கள், இஸ்லாமிய சகோதரர்களை கேட்கிறேன், எந்த கட்சியிலும் சேருவதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது அல்லவா, யாரும் எந்த கட்சியிலும் சேர்ந்து செயல்படலாம் என்பது அவர்களின் உரிமை, திமுகவில் சேரலாம், அதிமுகவில் சேரலாம், திருமாவளவனுடன் சேரலாம், பாட்டாளி மக்கள் கட்சியுடன் சேரலாம், அது அவர்களுக்கு ஜனநாயகத்தில் உள்ள உரிமை, ஆனால் பிஜேபியில் மட்டும் சேர்ந்தால் எங்களை தாக்குவது ஏன்? உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.

எந்த கட்சியில் சேரவேண்டும் என்பது அவர்களின் உரிமை, உங்களுக்கு பிடித்த கட்சியில் சேர்ந்து சேவை செய்ய வேண்டும் என நீங்கள் என்னும் போது எங்களுக்கு பிடித்த கட்சியில் சேர்ந்து செயல்பட கூடாதா? எங்களுக்கு ஒரு தலைவரை தேர்வு செய்துகொண்டு மக்களை நாங்கள் சந்திக்க நீங்கள் ஏன் தடையாக இருக்கிறீர்கள் எல்லா இஸ்லாமியர்களையும் கூறவில்லை, ஒரு சிலரை நான் கேட்கிறேன், அவர்கள் கட்சித் தலைவர்களிடம் நல்ல பெயர் வாங்க, இவர் பிஜேபியில் சேர்ந்துவிட்டார் அதனால் அவரை மசூதியில் சேர்க்கக்கூடாது, அவர்களுக்கு சுடுகாட்டில் இடம் வழங்கக் கூடாது என்று ஏன் நீங்கள் பேசுகிறீர்கள்.

தயவுசெய்து பொறுமையாய் இருங்கள், தவறு என்றால் வாருங்கள் எல்லோரும் சேர்ந்து கேட்போம், எல்லோரும் போராடுவோம், உங்களுக்கு அடிக்க யார் உரிமை கொடுத்தது. நாங்கள் என்ன தவறு செய்து விட்டோம்? உங்கள் சொத்தை எழுதி வாங்கிவிட்டோமா? உங்களை ஏமாற்றி விட்டோமா? உங்கள் சொத்தை அபகரித்து விட்டோமா? பிரதமர் கொண்டு வந்த திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க ஏன் நீங்கள் விட மாட்டேன் என்கிறீர்கள். எத்தனையோ இஸ்லாமிய பெண்கள் இன்னும் ஏழைகளாக படிக்க கூட வழியில்லாமல் இருக்கிறார்கள். எத்தனையோ திட்டங்கள் இருக்கிறது, அதை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்.

தயவுசெய்து இமாம்களையும் எங்கள் ஜமாத் தலைவர்களிடத்தில் கேட்கிறேன், எங்களை அனுமதியுங்கள் நான் காட்சியில் ஓட்டுப்போட கேட்கவில்லை, பாஜகவிற்கு வாருங்கள் என்று நான் அழைக்கவில்லை, பிரதமரின் திட்டத்தில் மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க நான் விருப்பபடுகிறேன் எங்களை அனுமதியுங்கள், இதை விட்டுவிட்டு தொழுகை நடத்த வருபவர் மீது தாக்குதல் நடத்துவது சரியா? இது தான் இஸ்லாம் நமக்கு போதித்திருக்கிறதா? நபிகள் நமக்கு இதைதான் கற்றுக் கொடுத்தாரா? நான் கண்ணியமிக்க இஸ்லாமியர்களிடம் கேட்கிறேன், நீங்கள் எங்களுக்காக குரல் கொடுங்கள், இனி எந்த வன்முறையும் நடக்கக்கூடாது, இன்று இவர் தாக்குகிறார்கள், நாளை அவர்கள் தாக்குவார்கள், இப்படியே போனால் நாம் சீர்கெட்டு தான் போவோம். துவா செய்யுங்கள். ஜெய்ஹிந்த்... இவ்வாறு அவர் பேசினார்.