கர்நாடகாவில் குமாரசாமியை வீட்டுக்கு அனுப்பிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் கைகளிலேயே எடியூரப்பாவின் முதல்வர் பதவியும் சிக்கியுள்ளது. 
 கர்நாடகாவில்  நீடித்து வந்த குழப்பங்களுக்கு தற்காலிகமாக தீர்வு ஏற்பட்டிருக்கிறது. முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்றுள்ளார். முதல்வராக அவர் மட்டுமே பொறுப்பேற்றுள்ளார். அவரை வரும் 31-ம் தேதிக்குள் சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டுள்ளார். ஆனால் திங்கள் கிழமையே சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்கப் போவதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்.  நம்பிக்கை வாக்குக் கோரும் தீர்மானத்தில் பாஜக வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.


கர்நாடகாவில் மொத்த உறுப்பினர்களின் பலம் 224. 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்தபோதும், அவர்களுடைய ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்கவில்லை. மாறாக 3 எம்.எல்.ஏ.க்களை 2023-ம் ஆண்டுவரை தகுதி நீக்கம் செய்து அதிரடியாக அறிவித்துள்ளார். அதில் ஒருவர் சுயேட்சை எம்.எல்.ஏ.. அவர் பாஜக பக்கம் சாய்ந்தவர். 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துவிட்டதால், தற்போது கர்நாடக சட்டப்பேரவையின் பலம் 221 ஆகக் குறைந்துவிட்டது.
இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் பாஜகவுக்கு 111 உறுப்பினர்கள் தேவை. ஆனால், தற்போது ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ. ஆதரவோடு 106 உறுப்பினர்கள் பாஜகவுக்கு உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. குமாரசாமிக்கு எதிராக வாக்களித்தா. அவரும் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஆதரவு அளித்தாலும் 4 உறுப்பினர்களின் ஆதரவு குறைவாகவே இருக்கிறது. என்றாலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது.
திங்கள் கிழமை அன்று சட்டப்பேரவையில் எடியூரப்பா நம்பிக்கை வாக்குக் கோரும்போது, ராஜினாமா செய்த 12 எம்.எல்.ஏக்கள் சபையில் பங்கேற்காதபட்சத்தில் சபையின் பலம் 209 ஆகக் குறையும். அந்த எண்ணிக்கையின்படி 105 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பாஜகவுக்கு இருந்தாலே போதுமானது. தற்போது 106 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் நூலிழையில் வெற்றி பெறலாம். 
அப்படி வெற்றி பெற்றாலும், ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களின் முடிவை சபாநாயகர் ஏற்றாலோ அல்லது தகுதி நீக்கம் செய்தாலும், அடுத்த ஆறு மாதங்களில் இந்தத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முழு மெஜாரிட்டியைப் பெற்றாதால்தான் எடியூரப்பாவால் ஆட்சியை மேற்கொண்டும் நடத்த முடியும்.