Will the minister meet Rowdy to attack the police? - High Court Judge Kirubakaran condemned

காவல் துணை ஆய்வாளர், தினேஷை தாக்கிய ரவுடி கொக்கிகுமாரை, அமைச்சர் மணிகண்டன் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறியதற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை சாலையில், கடந்த 6 ஆம் தேதி அன்று ரவுடி கொக்கி குமார் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் நடுரோட்டில் தகராறில்
ஈடுபட்டனர். அப்போது, ரவுடிகளைப் பிடிக்க, காவல் துணை ஆய்வாளர் தினேஷ் என்பவர் முயன்றார். அப்போது துணை ஆய்வாளருக்கும், ரவுடிகளும்
கடுமையாபக தாக்கி கட்டிப்புரண்டு சண்டையிட்டனர்.

இதன் பின்னர், ரவுடிகள் கொக்கிகுமார், விக்னேஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். காயமடைந்த ரவுடிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வந்தனர். அப்போது அவர்களை அமைச்சர் மணிகண்டன் நேரில் சென்று ஆறுதல் கூறியிருந்தார். அமைச்சரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் ரவுடியால் தாக்கப்பட்ட காவல் துணை ஆய்வாளர் தினேஷ், பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். 

ரவுடி கொக்கிகுமாரை, மருத்துவமனையில் சந்தித்து அமைச்சர் மணிகண்டன் ஆறுதல் கூறிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி
சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. 

இந்த நிலையில், ரவுடி கொக்கிகுமாரை, அமைச்சர் மணிகண்டன் சந்தித்து ஆறுதல் கூறியதற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்டனம்
தெரிவித்துள்ளார். காவலரைத் தாக்கிய ரவுடியை, அமைச்சர் சந்திப்பதால் காவல் துறையின் மாண்பு குறையாதா? என்றும் நீதிபதி கிருபாகரன் கேள்வி
எழுப்பினார்.