தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் தளர்வுகளும், பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கடுமையான ஊரடங்கும் நீட்டிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் தளர்வுகளும், பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கடுமையான ஊரடங்கும் நீட்டிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவியது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 36,000ஐ கடந்ததால் கடந்த மாதம் 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 1-ம் தேதியில் இருந்து மேலும் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், உச்சம் தொட்ட தொற்று எண்ணிக்கை, ஊரடங்கு காரணமாக குறைந்து 25,000க்கும் கீழ் வந்தது. சென்னையில் 6,500க்கு மேல் இருந்த தொற்று எண்ணிக்கை 2,450 என்கிற எண்ணிக்கையில் குறைந்தது.

ஆனாலும், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை குறையாமல் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ஊரடங்கை நீட்டிப்பதா? அல்லது தளர்வுகளுடன் அமல்படுத்துவதா? அல்லது நீக்குவதா என்பது குறித்து முதல்வர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலர் இறையன்பு, சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவினரும் பங்கேற்றனர்.

தமிழகத்தில் தற்போது கொரோனா வேகமாக குறைந்து வருவதால் 7-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்கலாமா? என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. கொரோனா மீண்டும் பரவாமல் இருக்க பொதுமக்கள் பொது இடங்களுக்கு வரும்போது முக கவசம் அணிவதை கண்டிப்பாக கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும் என்பது போன்றவைகள் ஆலோசிக்கப்பட்டது. மேலும், கொரோனா தடுப்பூசியை அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிமுகள்ள மேற்கு மாவட்டங்களில் ஊரடங்கு விதிகளை கடுமையாக அமல்படுத்துவது பற்றி அரசு பரிசீலனை செய்து வருகின்றனர்.
இதுபற்றிய அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
