அடுத்தவங்க சாப்பாட்டை ஆட்டையப்போடற திமுகவா நல்லாட்சி கொடுக்கப்போகுது..?  என பாஜக ஆதரவாளர் எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆதரவற்றோர் மற்றும் தொழிலாளிகளுக்கு உணவு பொட்டலம், அத்தியாவசிய பொருட்கள் என பல்வேறு சேவைகளை, 'சேவா பாரதி' செய்து வருகிறது.


திருப்பூர் அருகே பெருமாநல்லுாரில், சேவா பாரதி அமைப்பினர், அங்காளம்மன் கோவில் மண்டபத்தில், உணவு சமைத்து, கணக்கம்பாளையம், ஈட்டிவீரம்பாளையம் உட்பட சுற்றுவட்டார கிராமத்திலுள்ள ஆதரவற்றோருக்கு வழங்கி வருகின்றனர். தற்போது, உணவு சமைக்கக் கூடாது என, பெருமாநல்லுார் ஊராட்சி துணை தலைவராக உள்ள தி.மு.க., வை சேர்ந்த கிளை செயலாளர் வேலுசாமி கூறி பிரச்னை செய்வதாக, சேவா பாரதி அமைப்பினர் குற்றம்சாட்டினர். பெருமாநல்லுார் பா.ஜ.க ஒன்றிய தலைவர் ஜெகதீஷ் கூறுகையில்,''உரிய அனுமதி பெற்ற பின்னரே, கடந்த 1ம் தேதி முதல் சேவா பாரதி சார்பில், கோவில் மண்டபத்தில் உணவு சமைத்து கொடுத்து வருகின்றனர்.

அவர்களுடன், பா.ஜ.,வினர் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ஆனால், திடீரென, 'கோவிலில் சமைக்கக் கூடாது' என, ஊராட்சி துணை தலைவர் வேலுசாமி எதிர்ப்பு தெரிவித்தார். தினமும், 130 சாப்பாடு கொடுங்கள் என நெருக்கடி கொடுத்தார். இதை ஏற்க மறுக்கவே, கோவில் நிர்வாகத்திடம் கூறி, எங்களை காலி செய்ய வைத்து விட்டார்,'' என்றார்.இந்த குற்றச்சாட்டு குறித்து, வேலுசாமியிடம் கேட்டதற்கு, ''தனியாக உணவு தயாரித்து கொடுக்க வேண்டாம் என்று, மாநில அரசு கூறியதை தான் சொன்னேன். ஊராட்சி சார்பில் உணவு தயாரித்து வழங்கி வரும் நிலையில், நாங்கள் அவர்களிடம் எதுவும் உணவு கேட்வில்லை,'' எனக் குற்றச்சாட்டு எழுந்தது. 
இந்தச் செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ள எஸ்.வி.சேகர், ‘’அடுத்தவங்க சாப்பாட்டையே ஆட்டையப்போடற திமுக நல்லாட்சி குடுக்கப்போகுதா? இதையும் இன்னிக்கு வீடியோ கான்பிரன்ஸ்ல பேசுங்க. மோடியை பாராட்டின கே.பி.ராமலிங்கத்தை நீக்கின மாதிரி இந்த ஆளை நீக்க தைரியம் இருக்கா. நிரூபியுங்க’’ என கூறியுள்ளார்.