நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில், தம்பி இடத்தில் அண்ணனை நிறுத்த காங்கிரஸ் கட்சி யோசித்துக்கொண்டிருக்கும் நிலையில், அத்தொகுதியை திமுக காங்கிரஸுக்கு விட்டு தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்டது. அதில் நாங்குநேரி தொகுதியும் ஒன்று, அத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வசந்தகுமார் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக்கிவிட்டார். இதனால், நாங்குநேரி தொகுதி காலியாக உள்ளது. 
கடந்த 2006 - 11 காலகட்டத்தில் காங்கிரஸ் நின்ற தொகுதியில் இடைத்தேர்தல் வந்தபோது, அத்தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கே வழங்கினார் அன்றைய திமுக தலைவர் கருணாநிதி. ஆனால், இப்போது நாங்குநேரியில், விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக நிற்க வேண்டும் என்று கட்சியினர் விரும்புகின்றனர். திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்படுவதற்கு முன்பே, ‘ நாங்குநேரியில் திமுக போட்டியிட வேண்டும்’ என்று வலியுறுத்திவிட்டார்.
ஆனால், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்குமா இல்லையா என்ற விரக்தியில் உள்ளார் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி. சென்னையில் காமராஜர் பிறந்த நாள் விழாவில் பேசியபோது அழகிரி இதைப் பற்றி பேசியும்விட்டார், “ ‘முதல் மரியாதை’ படத்தில், எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் என்ற வசனத்தைப்போல எனக்கு ஓர் உண்மை தெரியாததால், இரவில் துாக்கம் வருவதில்லை. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக, மூத்தத் தலைவர் குமரி அனந்தனை நிறுத்தினால் என்ன என்ற கேள்வி எனக்குள் எழுகிறது'' என்று தெரிவித்தார்.


 நாங்குநேரி கிடைக்குமா இல்லையா என்ற கேள்விக்கு இடையே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி அனந்தனை நிறுத்தினால், திமுக எதிர்ப்பு தெரிவிக்காது என்ற நம்பிக்கையில் அழகிரி இவ்வாறு பேசியிருக்கிறார். திமுக ஆட்சியில் குமரி அனந்தனுக்கு பனை நல வாரிய தலைவர் பதவியை அன்றைய முதல்வர் கருணாநிதி வழங்கியதுபோல, குமரிஅனந்தனை முன் நிறுத்தினால் திமுக விட்டுகொடுக்கும் என்ற நம்பிக்கையில் அழகிரி இவ்வாறு பேசியதாகக் கூறப்படுகிறது. தம்பி வசந்தகுமார் இடத்தில் அண்ணன் குமரிஅனந்தனை நிறுத்துவது சென்டிமென்ட் மூலம் காய் நகர்த்தும் வகையிலும் அழகிரி இவ்வாறு பேசியதாகவும் காங்கிரகாரர்கள் தெரிவிக்கிறார்கள். 
ஆனால், வயதான காலத்தில் குமரி அனந்தன் தேர்தலில் போட்டியிடுவரா என்பது ஒரு பக்கம் இருந்தாலும், திமுக இதற்கு ஒப்புக்கொள்ளுமா எனத் தெரியவில்லை.  நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளைக் கைப்பற்ற அதிமுக எல்லா வழிகளையும் பின்பற்றும் என்பதால், அங்கே திமுக நிற்பதே சரியாக இருக்கும் என்ற பேச்சு திமுகவில் ஓடிக்கொண்டிருப்பதால், நாங்குநேரி காங்கிரஸ் கட்சிக்குக் கிடைப்பது சிரமம்தான் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.