எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா  என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கிளி ஜோசியம் பார்த்தார்.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன், ஏமூர் பஞ்சாயத்து பகவதியம்மன் கோவில் திடலில், சுற்றுலா துறை சார்பில் பொங்கல் விழா, விளையாட்டு போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசு வழங்கினார். பிறகு அந்த பகுதியில் கிளி ஜோசியம் பார்த்து கொண்டிருந்த, பெரியவர் முன் அமர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர், 100 ரூபாயை கொடுத்து முதல்வர் பழனிசாமி பெயருக்கு ஜோதிடம் பார்க்க வேண்டும். அவர் மீண்டும் முதல்வர் ஆவாரா என, துல்லியமாக சொல்ல வேண்டும் என்றார்.

இதையடுத்து, கூண்டுக்குள் இருந்த கிளியை வரவழைத்த ஜோதிடர், ஒரு சீட்டை எடுக்க சொன்னார். கிளியும் உடனடியாக, முதல் சீட்டை எடுத்து கொடுத்து விட்டு, கூண்டுக்குள் சென்று விட்டது. அந்த சீட்டில், சிவன், பார்வதி, விநாயகர் மற்றும் முருகன் படங்கள் இருந்தன. அதை பார்த்த ஜோதிடர், 'சிவன் குடும்பத்துடன் வந்துள்ளது, ஆசீர்வதிக்கும் விஷயமாகும். 

நீங்கள் கேட்ட கேள்வி நிச்சயம் நடக்கும். முதல்வர் பழனிசாமி மீண்டும் முதல்வராவார். வழக்கமாக கிளி பல சீட்டுகளை கலைத்து விட்டுதான், ஒரு சீட்டை எடுக்கும். ஆனால், கிளி எடுத்த முதல் சீட்டிலேயே சிவன் வந்துள்ளதால், நினைத்த காரியம் நடக்கும்' என்றார்.