will Kamal Hassan join hands with Kejriwal?
கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் தீவிரமடைந்துவரும் நிலையில், இன்று சென்னை வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், கமலை சந்தித்து பேசுகிறார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சற்று தீவிரமாக அரசியல் பேசியும் அரசை விமர்சித்தும் வந்த கமல், அண்மைக்காலமாக அரசுக்கு எதிரான தனது கருத்துக்களை டுவிட்டரிலும் பேட்டியாகவும் கொடுத்து அதிரடி காட்டி வருகிறார்.
அவரது அரசியல் பிரவேசம் தீவிரம் அடைந்துவரும் நிலையில், தனிக்கட்சிதான் தொடங்குவேன் என்றும் எந்த கட்சியிலும் இணைய மாட்டேன் என்றும் கூறிவருகிறார் கமல்ஹாசன்.
டுவிட்டரை தனது பிரச்சாரக் களமாக பயன்படுத்தும் கமல், தான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மேடையையும் அரசியல் பிரச்சாரக் களமாகப் பயன்படுத்தி வருகிறார்.
கமல் எப்போது அரசியலுக்கு வருகிறார்? தனிக்கட்சி தொடங்குவாரா? என பல கேள்விகள் மக்கள் மத்தியிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியில் கமல் இணையப் போவதாக அண்மையில் தகவல் வெளியானது. ஆனால் அதை கமல்ஹாசன் மறுத்தார்.
இந்நிலையில், இன்று சென்னை வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், கமல்ஹாசனை சந்தித்து பேசுகிறார். அப்போது, ஆம் ஆத்மி கட்சியில் இணைய கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், டெல்லி சென்ற கமல்ஹாசன், அரவிந்த் கேஜ்ரிவாலை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
