தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 5 - 6 தொகுதிகளில் வென்றால்,  திமுகவால் கூடுதலாக ஒரு மாநிலங்களவை பதவியை பெற முடியும். 
தமிழகத்தில் காலியாக இருந்த 18 சட்டப்பேரவைத்  ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. எஞ்சிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்றுவருகிறது. இந்தத் தேர்தலில் திமுக முழுமையாக வெற்றி பெற்றால், அதிமுகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றலாம். இதனால், இந்தத் இடைத்தேர்தல் முடிவு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இந்த இடைத்தேர்தல் மூலம் திமுகவுக்குக் கூடுதலாக ஒரு எம்.பி. கிடைக்கும் வாய்ப்பும் காத்திருக்கிறது. 22 தொகுதி இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 5 - 6 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றால், கூடுதலாக ஒரு மாநிலங்களவை பதவியை அக்கட்சியால் பெற முடியும்.
வரும் ஜூலை மாதம் தமிழகத்தில் திமுகவின் கனிமொழி, அதிமுகவின் மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்ட்டின் டி,ராஜா உள்பட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தற்போது திமுக கூட்டணிக்கு 97 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதை வைத்து இரண்டு மாநிலங்களவைப் பதவியை எளிதாகப் பெற முடியும். அதேவேளையில் இடைத்தேர்தலில் 5 - 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால், மூன்று மாநிலங்களவைப் பதவியை திமுகவால் பெற முடியும்.


கடந்த 2016-ல் மா நிலங்களவைத் தேர்தல் நடந்தபோது கூடுதலாக 29 எம்.எல்.ஏ.க்களை திமுக கொண்டிருந்தபோதும், டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி என இருவரை மட்டுமே மாநிலங்களவை தேர்தலில் திமுகவால் நிறுத்த முடிந்தது. ஆனால், தற்போது கூடுதலாக ஒரு உறுப்பினர் பதவியைப் பிடிக்க திமுகவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை பதவியை திமுக ஒதுக்க உள்ள நிலையில், திமுக இரண்டு மாநிலங்களவை பதவியைப் பெற வேண்டுமென்றால், இடைத்தேர்தலில் திமுக 5 - 6 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.


இதன்மூலம் அதிமுகவிடமிருந்து ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திமுக பறிக்க முடியும். மே 23 என்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது திமுகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவி கூடுமா இல்லையா என்பது தெரிந்துவிடும்.